காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
நீ பிறந்தவுடன் பறந்தேன்-வானில்,
மலடி என்று மற்றோர் ஏசவிடாமல்
அம்மா என்றழைக்க,
அமுத மொழியுரைக்க,
அன்பே நீ வந்தாயென்று....
மாதங்கள் மலர்ந்ததும்
மருத்துவமனைக்கு முன்னேறினேன்
உன்னுடன் -
நீ நோயின்றி வளர
உன் கண்ணில் நீர் வர
நான் இனங்கிட்ட
ஒரு சமயம்-
தடுப்பூசி-
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்-
இன்று விட்டால் நாளை உனக்கு அது இல்லாமல் போகலாம்.......
வருடங்கள் வளர்ந்தன
பள்ளிக்கு முன்னேறினேன்
உன்னுடன்-
நீ சிந்தையில் செழித்திட
உன் கண்ணில் நீர் வர
நான் இனங்கிட்ட
மற்றுமோர் சமயம்-
பள்ளி சேர்க்கை-
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்-
இன்று விட்டால் நாளை உனக்கு அது இல்லாமல் போகலாம்.......
மகனே நீ மேலும் வளர
நீ விரும்பிய துறையில்
நீ சிறக்க
என் சுமைகளை உன் சுகமாய்
மாற்றி
நீ படித்திட
மற்றுமோர் ஓட்டம்-
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்-
இன்று விட்டால் நாளை உனக்கு அது இல்லாமல் போகலாம்.......
என் செல்வம் என்றும் என்
குழைந்தை என்றும்
எண்ணி இருக்கையிலே
உன் வாழ்வும் அங்கே
உன்னதமடைய
உனக்கோர்
உடையாளை
உன்னவளை
உனக்காய்-
தேடினேன்-
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்-
இன்று விட்டால் நாளை உனக்கு அவள் இல்லாமல் போகலாம்.......
மணவாழ்வில்
மகிழ்ந்திட்டு
நான் பெற்ற செல்வம்
என்றெடுத்த
அச்செல்வத்தை
மடியில் போட்டு கொஞ்ச நினைத்தேன்,
மகனே,
உன் வார்த்தைகள் அவ்வாறு ஏன் உதிர வேண்டும்???
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் அம்மா-
இன்று விட்டால் நாளை உனக்கு அங்கு இடம் இல்லாமல் போகலாம்.......
முதியோர் இல்லம்.............

