விளிப்பு உணர்ச்சியும் விழிப்பு உணர்ச்சியும்
விளிப்பு உணர்ச்சியும் விழிப்பு உணர்ச்சியும்
========================================ருத்ரா
தமிழா!தமிழா!
என்று உன்னை
எத்தனை முறைதான்
விளிப்பதோ?
கல் கேட்டால்
ஆகும் அது
கல்பாக்கம்.
மண் கேட்டால்
பார்க்கும்
அது கண் முளைத்து.
நீ கேட்டாய்
எத்தனை முறை?
இருப்பினும்
இலம் என்று
அசையாதிருந்தால்..தமிழ்
நிலம் என்னும்
நங்கை நல்லாள்
இல்லாது போவாள்
அறிவாயோ?
விழிப்பது தானே
விதை!
முளைப்பது தானே
வினை!
பெயர்ச்சொல்லும்
வினைச்சொல்லும்
இல்லா தமிளனாய்
இருக்கின்றாய் தமிழா!
சரித்திரம் எத்தனை?
சான்றுகள் எத்தனை?
ஊன்றுகோல் இல்லா
முதியவன் போல
முடங்குபவனா
முத்தமிழ்த் தமிழன்?
நிற்கவும் ஓர் இடம் இல்லை.
தன் நிழல் ஒன்றே இவன்
தங்கும் நிழல் ஆகிய
கொடுமை நிகழ்வுகள்
எத்தனை?எத்தனை?
புத்தனை இவனும்
புனிதன் என போற்றினான்.
எறும்புகள் உயிர்கள்
காக்கிறோம் என்று
மயில்கள் கொன்று
இறகு துடைக்கும்
அந்த
சரண கீதமோ இவனை
மரணக்காட்டில் தள்ளியது.
காடுகள் யாவும்
கழனி பெருக்கினான்..இவன்
புல்லைத்தொட்டால் அது
தென்னை ஆனது.
பூண்டுகள் கூட
தேயிலை ஆனது...இவன்
வியர்வை வடித்த
ரப்பர் பாலில்
கப்பல்கள் நிரம்பி
வணிகம் வளர்ந்தது.
"யாதானும் ஊராமால்
நாடாமால்.."என்றவன்
நாடின்றி நடுங்குகின்றான்.
தமிழ் நாடெனும்
அவன் வீடு
அயலவன் கூடாரம்
ஆகிப்போனது.
ஒட்டகம் நுழைந்தது
மந்திரம் சொன்னது.
தந்திரம் செய்தது.
முடிவில்
தங்கத்தமிழனுக்கோ
தங்க இடமில்லை.
இரைச்சல் மொழியின்
இரையான பின்னே..
எச்சில் இலையாய்
இறைந்து கிடக்கின்றான்.
தமிழ் மொழி வேண்டாம் எனும்
தருக்கர் கூட்டமே
துருப்புச்சீட்டை பற்றிக்கொண்டது.
நம் கையை வளைத்து
நம் முதுகில் தினமும்
நம்மைக்கொண்டே
கத்திகள் பாய்ச்சும்
கட்சிகள் நடத்தி நாடகம் காட்டுது.
"தமிழ்" என்று நம்
உயிரொலி உரைத்தால்
தாங்கிட இயலா
தரங்கெட்ட கூட்டங்கள்
எள்ளி நகையாடி
இன்னல்கள் செய்தன.
தமிழனுக்கு தமிழனை
எதிரிகள் ஆக்கின.
சினிமா என்னும்
"நிழற்சாராயம்"
நித்தம் குடித்துத் தன்
சித்தம் இழந்தவன்..தமிழ்ச்
சத்தம் மறந்தவன்
சருகுகள் ஆனான்.
இமயத்தில்
வில் கொடி ஏற்றினான்
கனக விசயன் தலையில்
கல் ஏற்றினான்
கண்ணகி சிலைக்கு
ஒரு தமிழன்.
ஆனாலும்
அவன் தலையில்
பாறங்கல் போட
"மீனும்" "புலியும்"
வரிந்து கட்டியதே
நம் வரலாறு.
கண்ணகி என்றால்
"தோஷம்" ஆகி
கடலில் எறியாத குறையாய்
மியூசியம் எனும்
சவக்கிடங்கில்
வீசப்பட்ட வரலாறும்
நாம் அறிவோம்.
முத்தமிழன்கள் தான்
மூன்று பேர் கைகளும்
கத்தியுடன்...
அடுத்தடுத்தவன்
கழுத்துகளில் தான்.
இப்படி
இரண்டாயிரம் ஆண்டாய்
மிரண்டு தான் நிற்கிறோம்.
மீட்சியில்லை
இன்றும்
அந்த காட்சிகள் தான்!
உலகம் யாவிலும் தமிழ்
ஊற்றுப்படுகைகள்
ஆயிரம் உண்டென
ஆற்றுப்படைகள்
ஆயிரம் சொல்லின.
இறுதி மூச்சாய்
ஈழமே மிச்சம்.
ஈத்து உவந்த போதிலும்
பெரிது உவந்த நம்
தமிழ்த்தாய் இன்று..உயிர்
ஈத்து உவந்த தம்
புதல்வர்கள் கண்டு
கண்ணீர் வடித்தாள். தன்
செந்நீர் கொண்டு
கண்ணீர் வடித்தாள்.
அந்தக்கண்ணீர்
உப்புக்கரிக்காது..
துப்பாக்கிகள் கண்டு
தூர்ந்து விடாது..தமிழ்ப்
பகை வெறியின்
தப்புகள் எரிக்கும்.அதன்
தவறுகள் நொறுக்கும்.
தமிழா! தமிழா !
இந்த சொல்லுக்கு இருக்கிறது
"விளிப்பு உணர்ச்சி"
உன் விழிக்கு தான் இல்லை
"விழிப்பு உணர்ச்சி?"
========================================ருத்ரா