#@# பூலோக சொர்க்கங்கள் எங்கே..? #@#
![](https://eluthu.com/images/loading.gif)
குளப்படுக்கை கடந்து
குளம்படிகள் பதித்து....,
திமிறியபடி வருகின்ற
திமில் காளைகள் எங்கே....?
வைகறை வானம் பார்த்து
வைதேகிகள் வாசல் தெளித்து....,
வண்ணக் கோலங்கள் போடும்
வளையல் கரங்கள் எங்கே...?
வசதியே வந்தாலும்
வழக்கமாய் காற்று வாங்க...,
வீதிகளில் சமரசமாய்
வீற்றிருக்கும் மக்கள் எங்கே...?
கருக்கரிவாள் எடுத்துகிட்டு
கருக்கலிலே போனாலும் கூட...,,
கஞ்சியின் ருசி பார்த்து
களைப்பாறும் மகிமை எங்கே...?
டிசம்பர் பூக்களை மாலையாக்கி
மதிய உணவு வேளையில்.....,,
குதூகலமாய் விளையாடும்
குறும்புக்கார பிள்ளைகள் எங்கே...?
குடும்பமும் சொந்தமும்
கும்மாளமாய் நடைபோட்டு...,
திருவிழாவில் ஒன்றாகிப் பின்
திசைபிரியும் காட்சிகள் எங்கே..?
வறண்டு போன நிலமும் - மழை
வரவை எதிர்பார்த்துக் கிடக்கும்...,
காலாற நடந்து போகையில்
கழனிகளும் நம்மை ரசிக்கும்....!
பார்க்க பார்க்க சலிக்காது
நினைக்க நினைக்க வெறுக்காது
கிராமத்து வாசனைகள் நிரம்பிய
பூலோக சொர்க்கங்கள் எங்கே...?!