தினமொரு தீபாவளி கொண்டாடுவோம்...!

தீமை அகன்றது நன்மை விளைந்தது
தீயினும் கொடிய புன்மை மறைந்தது
தீபத்தின் ஒளியில் அன்பு பிறந்தது
தீஞ்சுவை உணவுடன் ஆடையும் வந்தது

பாலகர் வந்தனர் பாசத்தைப் பொழிந்தனர்
பாவலர் வந்தனர் பாவிசைத் தருளினர்
பாரினிற் சிறந்த மானிட உறவினில்
பாலொடு தேனையும் குழைத்தே தந்தனர்

உற்றார் உறவோர் ஊரார் என்போர்
கற்றார் மற்றார் அனைவரும் கூடி
பெற்றார் பிறந்தார் சிறந்தோர் ஆகி
நற்றாள் தொழவே தீபத்தைக் கண்டார்

காதலுக் கென்றே கன்னியர் வந்தார்
வேதனை தீர்க்க காளையர் வந்தார்
தீதினை மறந்த பாலகர் வந்தார்
தீபஒளி யினைக் கண்டு மகிழ்ந்தார்

நேற்று நடந்தது நேற்றோடு போகவே
இன்று வருவது இனிதாவ தாகவே
தூற்றும் மானிடர் மனமது மாறவே
போற்றி வணங்குவோம் தீபத் திருநாளையே

மனமெனும் மாளிகை மகிழ்ந்து களிக்கவே
தனமெனும் பொருள்தான் நிறைந்து பெருகவே
இனமான தமிழர் வேற்றுமை நீக்கியே
தினமொரு தீபாவளி கொண்டாடுவோம்...!

சூரிய ஜோதி

எழுதியவர் : சூரிய ஜோதி (12-Nov-12, 9:40 am)
பார்வை : 92

மேலே