பிரியே உனைப் பிரியும் வேளையில்
சூழும் ஆதவனின் முகத்தினை நோக்கி
நின்றால் சூரிய காந்திப் பெண்ணாள்;
ஆழியின் பரப்பினில் இரையினைத் தேடி
பறந்தன கடற் காகங்கள் கோடி.
பாழுந்தோப்பின் சவுக்கு மரங்களோ
தென்றலின் தழுவலில் தலைகளைச் சாய்க்க
ஊழினை மறக்க உறுதுயர் நீக்க
ஊட்டினாய் இனிய கான மருந்து!.
வீடு செல நினைந்த பள்ளி சிறார்க்கு
மணியோசை தருமே உள்ளக் கிளர்ச்சி
பாடு எனக் கேட்ட பாவி எனக்கோ
கள்ளின் மயக்கமுன் குரலினிற் தந்தாய்.
சுடும் வெயிலிற் சுருண்ட என் தேகம்
கடுங் கவி மழையில் நனைந்து நடுங்குதே
கடற் காகங்களும் உடன் பாடுவதென்ன
வானப்பெருவெளியில் நோக்குவதென்ன!
உடற்பெரிது கொண்ட நான் காணக் கூடாமல்
ஈனப் பறவையது காண்பது என்ன?
ஊசிமுனை போல நீண்டு வளர்ந்து
கூசிச் சிறுத்த சவுக்கின் விழிகள்;
ஆசித்து நிற்கும் அயற்சி சுவடின்றி
பாசிமணி தெறித்த தாரகைக் கோலமோ?
அன்று,அன்று அந்த கலங்கரை விளக்கை
ஆம், ஆம் அவை அதையே நோக்கின.
இன்று மட்டும் வாழ்ந்தோம் கனவு நிலத்தில்
என்றும் துன்பமே உனை பிரிவது என்றால்
ஒன்றே ஒன்று மிச்சம் உள்ளது
உனை முத்தமிட்டு நான் பிரிய வேண்டும்.
பிரியே உனை பிரியும் வேளையில்
உன் பாடல் ஒன்றே நினைவில் நிற்கும்
இனிய உன் குரலும் நம்மிருவர் குணமும்
தனி இவ்வேளையிற் தடை சொலக் கூடும்.
ஒரு உலகம் நம் இருவர்க்கும் போதா
இருவேறு கூறாய் நாம் பிரிந்து நிற்கையில்
ஒருமுறை மீண்டும் உருகிக் கேட்கிறேன்
பிரியே உனைப் பிரியும் வேளையில்.
கானம் பாடி என் சிந்தையை தணிப்பாய்
பாடு, பாடு மீண்டும் பாடு.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
