முயலாய் முயன்றோம்
ஆளே கிடைக்காமல்
ஆமையை அழைத்தது போட்டிக்கு
அறவே மறுத்தாலும்
அடம்பிடித்து இழுத்தது முயல்
ஆயத்தமானது
ஆமையும் போட்டிக்கு
ஆரம்பமானது
அன்றைய போட்டி
முண்டியடித்துக்கொண்டு
முயல் பாய்ந்தோடியது
அரக்கி அரக்கியே
ஆமை நகர்ந்தது
ஆமை வெல்வது
அசாத்தியமானது - ஆனால்
அதுதான் சாத்தியமானது
முயல் தோற்றது
ஏற்றுக்கொள்ள முடியாது - ஆனால்
அதுதான் நிஜம்
போட்டி என்றோ முடிந்தாலும்
பேட்டி இன்றும் தொடர்கிறது
கேள்விகள்
வேள்விகளாய் எரிகின்றன
எப்படி
ஆமைக்கு சாத்தியமானது
எப்படி
முயலுக்கு அசாத்தியமானது
ஆமைக்கு
அசுர வேகம் கிடைத்ததா ?
அல்லது - முயலின்
அசமந்தபோக்கு
அசந்து தூங்க வைத்ததா ?
முயலாய் முயன்று
முண்டியடித்துக்கொண்டோடி
ஆமையிடம் தோற்று
அடங்கிக்கிடக்கிறோம் நாமும்
விடைதெரியாத வினாக்களுடன் ............