உலக மனித உரிமை நாள்!

நண்பர்களே!வணக்கம்!

இன்று (டிசெம்பர் பத்து )உலக மனித உரிமைகள் நாள்!மனித நேயம் பேணும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!

உலகம் முழுவதும் பலநேரங்களில் பலமனிதர்கள் பலராலும் காயப்படுத்தப் படுகிறார்கள்.உடலவிலும் மனதளவிலும் அவர்கள் படும் துன்பம் சொல்லிலடங்காதது.சிலர் சர்வாதிகரத்துடன் செயல்பட்டு நிறைய மக்களைக் கொடுமைப் படுத்தியுள்ளனர்.ஹிட்லர் ,முசோலினி ,இடிஅமின் ,தொடங்கி,தற்போதைய முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் வரை பல அப்பாவிகள் பலராலும் துன்புற்று வருகின்றனர்.

இன்று கூட சேலத்தில் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த மூன்று பெண்களை ,திருடி விட்டார்கள் என்று கூறி அவர்கள் கைகளை நைலான் கயிறு கொண்டு கட்டி ,குச்சிகள்,கட்டைகள் ரப்பர் குழாய்கள்.போன்றவை கொண்டு கடுமையாகத் தாக்கினார்கள்.அடித்தவர்கள் பொதுமக்கள்,அதுவும் பெண்கள்! இவையனைத்தும் தொலைக்காட்சி கேமரா முன்பு
நடந்தது.

பார்த்த நமக்கே பதற்றம் இன்னும் கூடக் குறையவில்லை அடி வாங்கிய அப்பெண்கள் உடலாலும் உள்ளத்தாலும் எவ்வளவு கூனிக் குறுகிப் போயிருப்பார்கள்? அவர்கள் குற்றமே செய்திருந்தாலும் ,அவர்களை அடிக்கும் உரிமையை மக்களுக்கு யார் கொடுத்தது?
இது போன்ற பெண்களை விசாரிக்க சாதாரண காவல் துறைக்குக் கூட அதிகாரமில்லை. அதற்கென உள்ள சிறப்புப் பிரிவுதான் விசாரிக்க முடியும் என்கிறார் பீப்பில்ஸ் வாட்ச் அமைப்பின் தலைவர்,ஹென்றி டிபேன் .

என் கல்லூரிக் காலங்களில் எங்கள் தெருவில் திருட வந்தான் எனக்கூறி ஒரு பதினாலு வயது சிறுவனை கட்டி வைத்து கேபிள் வயரினாள் இரவு
முழுவதும் அடித்தார்கள். காலை நான்கு மணிக்கு
அவன் திருடன் இல்லை.வீட்டில் தன் அண்ணியின் கொடுமை தாங்காமல் ஓடி வந்த அநாதை சிறுவன்
எனக்கூறி அவிழ்த்து விட்ட போது,அவனால் சரியாக நடக்கக் கூட முடியவில்லை.இப்படி ஒரு
கொடுமையை கண்ணால் கண்டும் எதிர்த்து ஒரு வார்த்தை கூட கேட்க முடியாத என் இயலாமையை எண்ணிப் பலநாட்கள் வருந்தியிருக்கிறேன்.இன்று அதே போன்ற நிகழ்ச்சியை தொலைக் காட்சியில் பார்த்து உண்மையிலேயே உள்ளம் பதைத்துப் போனேன்!

டிஸ்கவரி ,அனிமல் பிளானெட் போன்ற சானல்களில் காட்டப் படும் விலங்குகள் வேட்டையில் பாய்ந்து குதறும் சிங்கம்,புலி போன்றவற்றுக்கு நடுவே மாட்டிக்கொண்டு தவிக்கும் மான்களின் தவிப்பை அப்பெண்களின் கண்களில் கண்டேன்.
மேலும்,மக்கள் யாரும் இம்மாதிரியான காரியங்களைத் தனியாகச் செய்வதில்லை.அப்படி ஒரு தைரியம் அவர்களுக்கு இல்லை.பலர் கூடி இருக்கும்போது ஏற்படும் குழு மனப்பான்மையாலேயே தவறு செய்கின்றனர்.

இனி இம்மாதிரியான தவறுகள் செய்யும்போது
ஒரு கணம் சிந்தியுங்கள் .நாமெல்லாம் மனிதர்கள்.காடுகளில் உள்ள மிருகங்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து செயல்படுங்கள்! மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!
நிறைய நிறைய
வருத்தங்களுடன்
ஆனந்த்

எழுதியவர் : கோவை ஆனந்த் (10-Dec-12, 11:20 pm)
சேர்த்தது : s.m.aanand
பார்வை : 320

மேலே