சாமிக்கும் சாதியுண்டு கேளடி ஞானப் பெண்ணே.....
வெயிலேறி வெயிலேறி
உடல் கருத்து
வெற்றுடம்பின்
ஒத்தத் துணியும் கருத்து
ஓங்கி வளர்ந்த அருவாளை
ஒத்தைக்கு துணை வச்சி
காட்டோரமா காவல் நிப்பான்
அந்த கருவாப்பய கருப்பன் (சாமி)....
வெத்தல பத்தியில்ல
சூடம் கொளுத்தி பூசையில்ல
நாளும் கிழமையில்ல
நாம வணங்க தேதியில்ல
நெத்தி தடவ திருநீருமில்ல
சுத்திவர இடமுமில்ல
நாலுகாசு பணமுமில்ல
உடம்பு குளிர நிழலுமில்ல
திங்க சோறுமில்ல
மாத்திக்க துணியுமில்ல
வருசமொரு சித்திரைக்கு
வருவான் முத்துமணி
அர்த்தராவு பூசபண்ணி
ஆட்டு ரத்தம் குடிச்சிடுவான்
அவன்பேரச் சொல்லிச் சொல்லி
ஒசந்த சாமியெல்லாம்
உசுரு பயமின்னு
ஊருக்குள்ள இருக்கையிலே
வெயிலுக்கும் ஒதவாத
ஒடமரத்து ஒரத்துல
ஒத்தையா நிக்கானே
பனமரத்துத் தூராக
அந்த பறப்பய
சாமியாக...