[380] ஏசுவைப் பாடு எம் பாவாய்!.....(3)

[10 பாடல்கள் கொண்ட தொகுப்பில் -3ஆவது - பாடல்]

18-12-12: செவ்வாய்
ஆதியில் வார்த்தையாய், ஆர்த்தெழுந்த தேவனாய்
வேதமாய்ச் சோதியாய், விண்ணிறங்கி வந்திங்கே
ஏதமே போக்கும்,எம் ஏசுபிரான் பொற்கமலப்
பாதமே சேரநம் பாவங்கள் தீருமென்ற
கீதமே பாடினோம்; கீர்த்திபல பேசிநிற்போம்;
பூதமே போல்துயிலும் பெற்றிதனை விட்டெழவே
பாதமே நோவுமோ? பஞ்சணையுன் காதலோ?
சீதமே நீக்கி,எமைச் சேர்ந்தே,பா டெம்பாவாய்!
========= அரும்பதவுரை:
ஆர்த்தெழுந்த: மறைத்தெழுந்த;
ஏதமே: துன்பமே
கீர்த்திபல :புகழ் பலவும்;
பெற்றி :பெருமை
நோவுமோ?: வலிக்குமோ?
சீதமே: சோம்பலே-மயக்கமே
========== பொருளுரை:
தொடக்கத்தில் வார்த்தையாய், ஒலியாய் இருந்தவர்; பின்னர் தன்னை மறைத்தெழுந்த கடவுளாய்/இறைவனாய் நிற்பவர்; மறை எனப்படும் வேதமாய், ஒளியெனப்படும் விளக்கமாய், பரலோகத்திலிருந்து இறங்கிவந்தவர்; இங்கு நமது துன்பங்களைப் போக்கும் நமது இயேசு எனப்படும் பெருமானாக உள்ளவர்; அவரின் பொற்றாமரைப் பாதங்களில் சரணடைய நமது பாவங்கள் எல்லாம் தீர்ந்து போய்விடும் என்று, நாங்களெல்லோரும்
பாடல்கள் பாடிப் புகழ்ந்தவாறு நிற்கின்றோம்; பூதத்தைப் போல நீயும் உறங்குகின்ற பெருமைதனை விட்டெழுந்து வந்தால் உனது பாதங்கள் வலிக்கப் போகின்றதோ? பஞ்சினாலான மெத்தென்கின்ற உனது படுக்கையின்மேல் உனக்கு அவ்வளவு காதலா? இக்குளிர்காலத்தின் சுகமான சோம்பலை அதன் மேலுள்ள மயக்கத்தை விட்டொழித்து, எழுந்து வந்து எம்மோடு சேர்ந்து நமது இயேசுவின் புகழைப் பாடவா!
==============

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (18-Dec-12, 7:06 am)
பார்வை : 153

மேலே