கிராமத்து இளசுகள்

கழுதைக்கு
கல்யாணஞ் செஞ்சு வச்சா
"கொட்டிப்புடும் மழை"

அம்பலக்காரர்
அழுத்திச் சொல்ல

மழை கொட்டாது
"குட்டிதான் போடும்"
எதிர்ப்புக்குரல் இப்படி வந்தது!

பேசாம கெழக்கே போகும்
ரெயில் கணக்கா
கன்னிப் பொண்ணு ஒண்ணு
தீப்பந்தம் ஏந்தி வந்தா.....

ஒளிஞ்சு நின்னு
எச்சி விடுவீக....
எரிஞ்சு விழுந்தாரு வாத்தியாரு!

அதெல்லாம் வேணாம்பா
ஆடு கோழி அறுத்து
அம்மனுக்கு சக்தி பூசை போட்டா.....

ஒக்காந்து சாப்பிட்டுவிட்டு
ஏப்பத்தை விட்டுட்டு
எந்திரிச்சுப் போவேன்னு
எதிர்குரல் ஒன்னு
எந்திரிக்க

அந்த தீர்மானமும்
அடிபட்டுப் போச்சு

அரிச்சந்திர 'மயான காண்டம்'
கூத்து நடத்துனா
பொத்துக்கிட்டு கொட்டும்.....

ஒண்ணும் கொட்டாது
அக்கம் பக்கத்து
ஊருச்சனமெல்லாம்
ஒக்காந்து 'ஒண்ணுக்குவிட்டுட்டு'
சந்திரமதி 'பிரகாரமில்ல'
அப்படீன்னு
சன் டிவி கணக்கா
அட்டணக் காலு போட்டு
அலுசுவாங்க - அவ்வளவுதான்

எதச் சொன்னாலும்
எதிர்பேச்சு சொல்லுறீங்க
அக்கறையிருந்தா
ஐடியா சொல்லுங்கப்பான்னு
ஊர் பெருசுக
வெடல பயலுககிட்ட
வௌரம் கேட்க

இங்க பாருங்க....

எண்ணூறு புள்ளி உள்ள
'நல்லூறு' நம்ம ஊறு

வீட்டுக்கு ஆயிரம்னா
எட்டுலட்சம் சேர்ந்து போகும்

கிணத்துக்கு லட்சம் வீதம்
எட்டுக்கிணறு வெட்டிப்புடலாம்
உடலால் உழைப்பதற்கு
ஊருச் சனமிருக்கு

வெட்டுகிற மண்ணெடுத்து
கொட்டுவதற்கு நாங்க இருக்கோம்

முப்பதே நாளில்
ஹிந்தி கற்கலாங்கிறமாதிரி
ஒரே மாசத்துல கெணறு
வெட்டி முடிச்சிடலாம்....
நட்டபயிர் காத்திடலாம்

வருணபகவான்
கண் திறக்கும் காலம் வரை
பூமி மாதா
மார்புல தான்
பால் குடிக்கும் - பயிரெல்லாம்

சொல்லி முடிச்ச போது
கொல்லாத கரகோஷம்

நமக்கு நாமே
ஆக்கிக்குவோம்
நாட்டை கரை
சேர்த்திடுவோம்

எழுதியவர் : நவீன் (24-Dec-12, 2:48 pm)
பார்வை : 178

மேலே