ரணம் - கே.எஸ்.கலை
சிரித்துகொண்டே இருக்கின்றேன்
சிந்தனைகள் இல்லாமல்...
வலித்துக்கொண்டே இருகிறது
இதயம் வஞ்சகமே இல்லாமல்....
❤
மெதுவாய்ச் செவிப்புகும்
மெல்லிசைக்கு மென்மையாய் – என்
கன்ன மேடையில் – சில
கண்ணீர்த் துளிகளின் நர்த்தனம் !
அத்தனையும் என் காதலுக்குச்
சமர்ப்பணம் !
❤❤❤
ஐம்பொறிகள் அத்தனையும்
தீப்பொறியைக் கக்குகின்றது !
❤❤❤
பிரசவிக்க முடியாத குழந்தையாக
நம் வாழ்க்கை ஆன பின்பும் -
கருவுற்ற காதல் குழந்தை
உதைத்துக்கொண்டே இருக்கின்றது
இதயத்திற்குள்...!
❤❤❤
மல்லாக்க படுத்துக்கொண்டு -
மனதோடு விளையாடிச் சென்ற
உன் நினைவுகளை மீட்டும் போது
காதோரம் பயணம் செய்யும்
கண்ணீர் துளிகளின் யாத்திரை - என்
இரவுகளை துவம்சம் செய்கின்றது...!
திறப்பில்லா பூட்டுகளால்
அடைக்கப்பட்ட அறைக்குள்
என் கனவுகள் இன்னும்
சுகமாய் உறங்கிக்கொண்டிருகிறது..!
❤❤❤
குத்துப்பாட்டு கேட்டால் கூட
குமுறுகிறது நெஞ்சம் - நீ போடும்
குத்தலாட்டம் நினைக்கையில்...!
குளிக்கும் போது.. நெஞ்சிலே
சவர்காரம் தடவி
ஓவியமாய் உன் பெயர் எழுதி
ரசிக்கும் கொஞ்ச நேரத்தில்
கரைந்து போகிறது அந்த ஓவியம்...
தண்ணீர் பட்டல்ல
என் கண்ணீர் பட்டு...!
கடைக்கு போகும் போது
சாக்லெட் இராக்கைப் பக்கம்
பார்த்தால்... கசக்கிறது நெஞ்சம்...
நீ - விரும்பிக் கேட்கும் சாக்லெட்
ஞாபகம் வருகையில்...!
❤❤❤
முத்தங்களால் முத்திரை குத்தப்பட்டு
கண்ணீர் துளிகளால் முகவரி எழுதப்பட்டு
புத்தக பைக்குள் நித்திரை செய்கிறது
அஞ்சலிடப்படாத காதல் கடிதங்கள்...!!!
❤❤❤
நீ அழைப்பாய் என
கைப்பேசியின் சினுங்களுக்காக
காத்திருக்கும் காதுகளுக்கு
பதில் சொல்லத் தெரியவில்லை....
கோர்த்துக் கொள்ள உன் விரல் தேடும்
என் விரல்களுக்கு ஆறுதல் சொல்ல
வார்த்தைகள் தெரியவில்லை...
உன் கன்னம் தேடித்
துடிக்கும் உதடுகளுக்கு
காரணம் சொல்ல தெரியவில்லை....
நாம் சுற்றிய வீதிகளில் நடக்கும் போது
தடுமாறி தடக்கும் பாதங்களைச்
சமாதான படுத்த தெரியவில்லை...
உன்னோடு சேர்ந்து பசிக்காத போதும்
பசியாறச் சென்ற விருந்தகங்கள் கடக்கும் போது
வயிறு கத்தும் சத்தம் கூட
உன் பெயர் சொல்வதாய் இருக்கிறது...
❤❤❤
தனிமைப்பட்டு போனது
என் உணர்வுகள் மட்டுமல்ல
என் உணர்சிகளும் தான்...
❤❤❤
காதல் பழுதாகிப்போனது
காலம் செய்த கோலத்தால் !
நினைவுகள் விழுதாகிப்போனது
காதல் செய்த பாவத்தால் !
கனவுகள் எல்லாம் கானலாகிப் போனது !
கற்பனைகள் எல்லாம் காலமாகிப் போனது !
வாழ்க்கை எனக்கு காணாமல் போனது !
❤❤❤
சேர்ந்து நாம் பெற்றிருந்தால்
நம் குழந்தைக்கு நீ கொடுத்திருப்பாய்
தாய்ப்பால் !
சேரமுடியாமல் நாம் பெற்ற
காதல் குழந்தைக்கு தினமும் நான்
கொடுக்கின்றேன்
“கண்ணீர்ப்பால்” !
❤❤❤
வரி வரியாய் எழுதுகிறேன்
வலி வந்தால் எனக்கு
வலிப்பது எனக்கு மட்டும்
என நினைக்கவில்லை...!
மேகங்கள் சூழ்ந்த நிலவாக
உன் சோகங்கள் மறைத்து வாழ்கின்றாய்
வலிகளைச் சுமந்து கொண்டு !
உன் கண்ணுக்குள்ளே வற்றி போகும்
கண்ணீர் துளிகளுக்கு நான் சிந்தும்
கண்ணீர் துளிகள் நிச்சயமாய் ஈடாகாது...!
சத்தம் போட்டு அழ
சுதந்திரம் இருக்கு எனக்கு...
சத்தம் இல்லாமல் அழக் கூட
சந்தர்பம் இல்லை உனக்கு -
நினைக்கும் போது உனக்கும் சேர்த்து
சத்தமாய் அழுவதை தவிர
எனக்கேதும் வழியில்லை...!
இருட்டறை நிழலாக
யாருக்கும் தெரியாமல்
எப்போதும் நானிருப்பேன் - உன்
வலிகளையும் சேர்த்து
அனுபவித்துக் கொண்டு...!
❤❤❤
மண மேடையை
மணல் வீடாய் ஆக்கிச்சென்றாலும்
மணல் வீட்டில் கூட உன்னோடு
மணக் கோலத்தோடு வாழ்ந்துக்
கொண்டிருகின்றேன்...!
❤❤❤
கடைசியாய் என்னை சந்தித்து
கட்டிபிடித்து கொண்டு -
"நிரந்தரமாய் உன்னை விட்டுப் போறேன்"
என நீ சொல்லி அழுத போது
கருகிப் போன என் இதயத்தில் இருந்து
என் எண்ணங்கள் கெஞ்சியது....
"காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்"
என்று....!!!!
❤❤❤
சரித்திரம் படைத்தது காதல்...
தரித்திரம் பிடித்தது வாழ்க்கை...!
❤❤❤
பத்து மாதம் பொறுத்துக்கொண்டால்
தீர்ந்து விடும் பிரசவ வலி !
எத்தனை ஜென்மம் எடுத்த பின்பு
தீருமடி இந்த காதல் வலி ?
❤❤❤
இருக்கும் இடம் மறந்து
நான் அழுதேன் குழந்தையாக...!
இலக்கணங்கள் மறந்து
என் பேனை அழுகிறது கவிதையாக !!!
❤