உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே... (பொங்கல் கவிதை போட்டி)

நிலத்தை உழுது மேடுபள்ளமாக்கி, விதைத்து
விளைந்த பொருளை அளந்து
கூறுப்போட்டு விற்பதின் மதிப்பைவிட
மேடுபள்ளத்தை சரிசெய்து, நிலத்தை அளந்து
கூறுப்போட்டு விற்பதின் மதிப்பு உயர்ந்ததால்
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே....

இட நெருக்கடி காரணமாக
விளைச்சல் நிலம், மனைப்பிரிவாக மாறினால்
விளைச்சல் நிலம் இயற்கை மரணம் அடைகிறது
வியாபாரத்திற்காக மாறினால்
விளைச்சல் நிலம் கொலை செய்யப்படுகிறது
மனிதன் மரணத்திற்குப் பிறகு
நிலத்தில் புதைக்கப்படுகிறான், ஆனால்
நிலத்தையே கொலைசெய்து எங்கு புதைக்கப் போகிறோம்
நிலக் கொலைப்பெருகினால்,
உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே....

வினாடிக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதித்தாலும்
ஒரு வருடத்திற்கு, ஒரு நெல்மணிக்கூட செய்யமுடியாது
நாம் உலைவைப்பதற்காக,
உழுது உழைக்கும், உழவன் வாழ்வில்
உலைவைக்க வேண்டாமே !

எழுதியவர் : லால்குடி மா. பொன்ராஜ் (4-Jan-13, 8:23 am)
பார்வை : 195

மேலே