இந்தியாவில் இதுவரையில் இல்லாத ஒரு பரபரப்பு, இந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி இருக்கிறது. வரப்போகும் பிரதமரிடமும், மத்திய அரசாங்கத்திடமும் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதுதான் முதல் எதிர்பார்ப்பாக இருந்தாலும், அடுத்து விலைவாசி உயர்வு தடுக்கப்படவேண்டும், ரூபாயின் மதிப்பு உயரவேண்டும், பொருளாதாரம் சீர்பெற வேண்டும், வேலை இல்லா திண்டாட்டம் போக்கப்படவேண்டும், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அடுக்கடுக்காக அடுத்த அரசாங்கம் செய்யவேண்டும், அந்த அரசாங்கத்துக்குத்தான் ஓட்டுப்போடவேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து, அதையெல்லாம் எந்த கட்சி செய்யும்? என்று தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முடிவு எது? என்பதை மே மாதம் 16–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை காட்டிவிடும். அவர்களின் நம்பிக்கையைப் பெறத்தான் ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறது. தமிழக மக்களைப் பொருத்தவரையில், தமிழ்நாட்டுக்குரிய சில பிரச்சினைகளும் இருக்கின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அனைவரையும் உலுக்குவது விலைவாசி உயர்வுதான். அதிலும், உணவு பண்டங்களின் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ரூபாயின் மதிப்பு மளமளவென்று குறைவதும், பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது உயர்ந்துகொண்டிருப்பதுமே முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. கடந்த 2 ஆண்டுக்குள் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 18 ரூபாய் உயர்ந்திருக்கிறது. 2012–ம் ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் டீசல் விலை 40 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.58.56 ஆகும். உணவு பொருட்கள், காய்கறிகள், பால் உள்பட அனைத்து பொருட்களையும் லாரிகள் மூலம்தான் எடுத்துச்செல்ல வேண்டிய நிலையில், இந்த டீசல் விலை உயர்வு, அந்த பொருட்களை ஏற்றிக்கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவை அதிகரிக்க வைத்து, அதன் காரணமாக அந்த பொருட்களின் விலையை உயர்த்திவிடுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவோ அதற்கேற்பத்தான், விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்லலாம். ஆனால், கச்சா எண்ணெய் விலையைவிட, நம் நாட்டில் வரி அதிகமாக இருப்பதுதான் விலையை ஏற்றிவிடுகிறது. அடுத்து, ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும் கவலை அளிக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பு குறைகிறது என்றால், அதன் பாதிப்பு ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும் பிரதிபலித்துக்கொண்டு இருக்கிறது. அவன்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறான். சர்வதேச கரன்சியான அமெரிக்க டாலரை வாங்க எவ்வளவு ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பதை வைத்துத்தான், ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. 1947–ல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், ஒரு அமெரிக்க டாலரை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. 1966–ல் ரூ.6.35 ஆகவும், 1975–ல் ரூ.8.41 ஆகவும் இருந்த டாலரின் விலை, தற்போது ஏறத்தாழ 61 ரூபாய்க்கு வந்துவிட்டது. இதன் பாதிப்பு சாதாரண ஒரு குடும்பத்துக்கு எப்படி ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம், 1968–ல் ஒரு ரூபாய்க்கு 12 முட்டைகளுக்கு மேல் வாங்க முடிந்தது. ஆனால், இன்று 12 முட்டைகளை வாங்க ஏறத்தாழ 50 ரூபாய் வரை ஆகிறது. இதேபோலத்தான், அனைத்து பொருட்களின் விலையும் விண்ணைத்தொடும் அளவுக்கு இருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்து இருப்பதால், நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சி இருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை, ஏற்றுமதியைவிட, இறக்குமதிதான் அதிகம் என்கிற வகையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கவேண்டியது இருக்கும். இதனால் ஏற்படும் பொருட்களின் விலை உயர்வு, ஏழை, நடுத்தர மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். எனவே, அடுத்த அரசாங்கம் இந்த விஷயத்தில் நிறை, குறைகளையெல்லாம் வந்தவுடனேயே ஆராய்ந்து, விலைவாசி உயர்வை பெருமளவில் குறைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதுதான் நல்லாட்சி. அத்தகைய ஆட்சியின் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்கவேண்டும் என்பதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வைகள் : 66
7
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே