பகலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. இரவும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. முதல்...
பகலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது.
இரவும் நிசப்தமாகத்தான் இருக்கிறது.
முதல் நாள் நினைத்தது போல் இரைச்சலாக இல்லை.
கார் ஓடுகிறது.
குழாய்ச் சண்டை கூச்சலிடுகிறது.
எருமை ஓயாமல் கத்துகிறது.
கடல் இரவெல்லாம் சீறுகிறது.
கூர்க்காக்காரன் தடியால்
இரவைத் தட்டித் தட்டி எழுப்பிக்கொண்டேயிருக்கிறான்.
கொளகொளவென்று குழாய் நீர்
குறை சொல்லிக் கொண்டேயிருக்கிறது.
எதிர்வீட்டுப் பையன் திண்ணையில் உட்கார்ந்து
ஊர்ப் பையன்கள் எல்லாம் ஒரு குரலாகக் குவித்தது போல
பாடத்தைக் கத்திக் கொண்டேயிருக்கிறான்.
அப்பா மொலு மொலு வென்று
வேதமோ சுலோகமோ சொல்லிக்கொண்டு
சுவாமியைக் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டே யிருக்கிறார்.
அண்ணா வழக்கம் போல
உச்ச ஸ்தாயியில் ட்யூசன் சொல்லுகிறான்.
தெருவில் எங்கெங்கோ கிடக்கிற ஏழெட்டு நாய்கள்
திடீரென்று நினைத்துக்கொண்டு - ஒன்று கூடி
கச்சேரியின் மிருதங்கம், பானை டோலக்கு, கஞ்சிரா, கொன்னக்கோல்
எல்லாரும் சேர்ந்து சண்டை போடுவார்களே...
அதுபோல், ஒன்றின்மேல் ஒன்று விழுந்து
கட்டுப் பட்டாசுப்போல வெடிக் கின்றன.
சை சை என்று யாரோ கத்துகிறார்கள்.
ஒரு நாய் உயீ உயீ என்று அழுதுகொண்டே ஓடுகிறது.
ஆனாலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது இரவு !
- தி. ஜானகிராமன் ( அம்மா வந்தாள் நாவலில் )