தோழர்களே, இந்தவார ஆனந்தவிகடனில் "லட்டு மாதிரி இருப்பது...", "உயிர்த்...
தோழர்களே, இந்தவார ஆனந்தவிகடனில் "லட்டு மாதிரி இருப்பது...", "உயிர்த் தீ" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன.ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
லட்டு மாதிரி இருப்பது ....
காலையில் வேலைக்குக் கிளம்புகையில்
இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி
‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள்.
‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று
சொல்லிவிட்டு வரும் வழியில்,
பருத்த உடலா,
மஞ்சள் சட்டையா
என் கொஞ்சல் பேச்சா
லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி,
லட்டுகள் உருளும் சாலையில் ஓடி
லட்டைக் குடித்து
லட்டை உண்டு,
லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில்
வீடு திரும்பும் வரை,
சின்ன லட்டு சொன்னதுதான் மனதில் ஓடியது.
லட்டு மாதிரி இருக்கிற பெண்ணால்
யாரையும் லட்டாக்கிவிட முடிகிறது.
உயிர்த் தீ
தொலைக்காட்சியின் குழப்பமான காட்சிகளை
பார்க்கப் பிடிக்காமல் சட்டென்று ரிமோட்டால்
அணைத்த அந்தக் கணத்தில்தான்
அவளுக்கு அந்த எண்ணம்
முதன்முதலாக வந்தது....
உந்திச் சுடர் பற்றி எரியும்
அந்தத் தீபத்தை
ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால்
எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.
-சேயோன் யாழ்வேந்தன்