கதை விவாதம் திரைப் பறவை 10

கரு கிடைத்து விட்டது..... கதையும் ஒரு லைன் கிடைத்து விட்டது.. இனி இதை பெரிதாக ஒரு சிறுகதைக்கோ, கதைக்கோ, தொடர் கதைக்கோ, சினிமாவுக்கோ ஏற்றாற்போல மாற்ற வேண்டும்... சம்பவங்கள்.... அடுத்தடுத்த காட்சிகள்... கதா பத்திரங்கள்.. இடங்கள்.. கதை நடக்கும் நேரங்கள்... என்று பார்த்து பார்த்து கட்டடத்தைக் கட்டுவது போல கதையை ஒரு வட்டத்துக்குள் கட்டமைக்க வேண்டும்.......நன்றாக போய்க் கொண்டிருக்கும்... இடத்தில் அடுத்த என்ன என்று எல்லாரும் யோசிக்கும் ஒரு காட்சியை வைத்தால் அது அம்பேல்....... இன்று பெரும்பாலானவர்களை, எல்லாம் தெரிந்தது போல ஒரு மாயம் சூழ்ந்துதுள்ளது. அதுதான் தெரியாமையை விட அச்சம் தரக் கூடிய ஒன்று....... இணையம் எல்லாவற்றையும் கத்துக் கொடுத்து விட்டது என்று நாமாகவே ஒரு வட்டம் இட்டு காக்கைக்கு வெள்ளை நிறம் அடித்துக் கொண்டு இருக்கிறோம்.. கருப்பின் நிஜம் நிஜமாகவே இருக்கிறது வெள்ளை மனதிலும்.. என்பது தான் உணரப் பட வேண்டிய உத்தமம்....இப்படி, தான் உணர்ந்தவைகள்... நம்மைச் சார்ந்தவர்கள் உணர்ந்தவைகள்.... எப்படி எங்கிருந்தது வேண்டுமானாலும் ஒரு கதை கிடைத்து விடும்.. அது ஒரு இரண்டரை மணி நேரத்துக்கு போதுமான கதையாக இருக்குமா என்றால் அங்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது....

உதாரணத்துக்கு இரண்டு பேர் காதலிக்கும் ஒரு பெண்.. இரண்டு பேரில் யாரை காதலிக்க வேண்டும் என்று, முன்பு இவர்கள் வாழ்வில் நடந்த, கடந்த அத்தனை சம்பவங்களையும் அலசி ஆராய்ந்து அதில் இருந்து ஒரு முடிவுக்கு வருவது பெரும்பாலான படங்களின் கதையாக நாம் பார்த்திருக்கிறோம்..... இப்போதெல்லாம்... அடுத்த காட்சியை அனுமானிக்க ஆடியன்சை விட்டு விட்டால் அது மொக்கை படமாகி பெட்டிக்குள் சுருண்டு விடும்.... கடைசி நிமிடம் டைட்டில் கார்ட் போடுவது வரை புதியதாக ஏதாவது ஒன்றை நாம் நிகழ்த்திக் காட்ட வேண்டி இருக்கிறது.... ஒரு திரை அரங்கில் அமர்ந்திருக்கும் குறைந்த பட்சம் 500 ஜோடிக் கண்களை நாம் நம்ப வைக்கும் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறார் ஒரு இயக்குனர்.... அதற்கு அந்தக் கதை அவருக்கு ஒரு ஒற்றையடி பாதையை அமைத்து தருவதுதான் முதல் கோணம்.... முதல் கோணல்.. முற்றும் கோணல் என்று சும்மா சொல்லவில்லை....அது அனுபவங்களின் தொகுப்பு...(மாற்றுக் கருத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்) ....(இங்கு வெற்றி என்பதே பணம் கொண்டவனாவது என்பதாக மாறி போய் விட்டது....வேறு கதை)

எனக்கு ஒரு கோபம் உண்டு.... "எனக்கு படிப்பு ஏறல, அதான் சினிமாக்கு வந்துட்டேன்னு"... எவனாவது, எவளாவது சொன்னா.. கம்பிய காய வைச்சு சூடு போடத் தோணும்... மிஷ்கின் ஒரு முறை கூறினார்... ஒரு மருத்துவன் ஆவதற்கு படிக்க வேண்டும்.. ஒரு தொழில் நுட்ப வல்லுவன் ஆவதற்கு படிக்க வேண்டும்.. ஒரு நிர்வாகி ஆவதற்கு படிக்க வேண்டும்....ஆனால் இரண்டரை மணி நேரம்.. பல கருத்துக்கள், பல முரண்கள் கொண்ட குறைந்த பட்சம் 500 பேருக்கும் ஒரே நேரத்தில் ஒரு கதையை பிடித்தது போல சொல்ல வேண்டும் என்றால் அந்த கதை ஆசிரியர்.. இயக்குனர் எவ்வளவு படித்திருக்க வேண்டும்.....?! யோசியுங்கள் தோழர்களே...... படிப்பினால் தான் இங்கு புரட்சிகள் நடந்திருக்கின்றன.. படிப்பில்லா சமூகமும், சினிமாவும், கதைகளும் அஸ்திவாரம் இல்லாத கட்டடங்கள் போல... சீக்கிரம் இடிந்து விடும்.. அஸ்திவாரம் இல்லாத கட்டடம் கட்டக் கூட படிப்பு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது...

அப்படிப்பட்ட ஒரு கதையை தனிப்பட்ட ஒருவனின் நோக்கில் சொல்லி விட முடியாது.. சொல்லலாம்.. முதல் ஒரு மணி நேரம் உங்கள் சொந்தக் கதையை எடுக்கலாம். படமாக்கலாம்... அதன் பிறகு.... நீங்கள் காலியாகி விடுவீர்கள்.... ஆக, இந்த இடம் உங்களைத் தேட வைக்கும் இடம்.... ஒரு கை ஓசை எழுப்பாது என்பது ஊரறிந்த விஷயம்.... நிரம்பாத குடத்தில் தான் இன்னும் கொஞ்சம் நீர் நிறையும்.... நிரம்பிய பின் அந்த குடம் தேங்கி விடுவது ரகசியமும் அல்ல.. புதுமையும் அல்ல.. ரகசியம் உடைக்கவும்.. புதுமை நிரப்பவும்... கதை விவாதம் தேவை... பகிர பகிர.... எதுவும் அதிகமாகும்.... கதையில் ஒரு முனையைப் பிடித்து நான் இழுத்தால், என் நண்பன்(உதவி இயக்குனராகவும் இருக்கலாம்) எனக்கு தெரியாத ஒரு முனை பிடித்து இழுத்துக் கட்டுவான்... இன்னொருவன் இன்னொரு முனை.... இப்படி... கண் முன்னாலே வித்தை நடக்கும் இடம், ஜாலம் காட்டும் மாயம், கதை விவாத சூழல்...

நான் கண் வைப்பேன்.. விவாதத்தில் அதற்கு கண் மை போடப்படும்.... சற்று உற்று கவனித்து விட்டு... கண்களைக் கொஞ்சம் சிறியதாக்கி விடுவோம்.. கதை அதைத் தான் கேட்கிறது... என்று புரியும்.. புரிந்து கொள்ள வேண்டும்... பெரிய கண்கள் பிடிக்கும் என்று சும்மா வெறுமனே டபக் டபக் என்று சிமிட்டிக் கொண்டிருந்தால் கதை கெட்டது.......ஒரு கதையை அதன் போக்கில் விட்டு விட்டு பின் வேண்டிய இடத்தில் தட்டி சீரமைத்து ஒரு முடிவுக்கு கொண்டு வருவது ஒரு முறை.....ஆரம்பத்தில் இருந்தே இது இப்படித்தான் என்று தட்டி தட்டியே கொண்டு செல்வது இன்னொரு முறை..சில போது நாம் மனதில் கொண்டுள்ள கருவைத் தாண்டி வேறு ஒரு பரிணாமத்தில் கதை ஒரு முடிவை எட்டும்.... அது யாரும் எதிர்பராத பாராத ஒரு கோணத்தில் ஒரு வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும்......... இப்படி கதை விவாதத்தில் நான் கண்டு உணரும்... உணர்ந்து, கொள்ளும் சூட்சமங்கள்,நுணுக்கங்கள் ஏராளம்... எத்தனையோ கதைகளுக்கு.. இரண்டு மூன்று முடிவுகளை வைத்துக் கொண்டு தூக்கம் வராமல் புரண்டிருக்கிறேன்.... நள்ளிரவில் நண்பன் கார்த்திக்கிற்கு அலைபேசியில் இம்சை கொடுத்திருக்கிறேன்..... அவனும் சலிக்காமல்.. கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வான்.... பதிலுக்கு பல கேள்விகளை கேட்பான்.. எல்லா கேள்விகளுக்கும் இல்லாவிட்டாலும்.. கிட்டத்தட் ஒரு 80% பதில்கள் கொண்ட முடிவைத்தான் முடிவாக வைத்திருக்கிறேன்.... அது பெரும்பாலும் நினைத்த இடத்தை சென்று சேர்ந்திருக்கிறது... சில நேரங்களில் எதிர் பார்த்ததைப் போலவே மாற்றுக் கருத்துக்களும் வருவதுண்டு.. அதற்காக கதையை மாற்றத் தேவை இல்லை.. படைக்கும் வரை தான். தன் படைப்பின் மீது படைப்பாளிக்கு உரிமை இருக்கிறது.. அதன் பிறகு படிப்பவரிடம்.. பார்ப்பவரிடம் விட்டு விட வேண்டும்.... கதையும் சொல்லி விட்டு பின்னால் பின் குறிப்பில் விளக்கமும் சொன்னால் நீ கதை எழுதவும் லாயிக்கில்லை.... படம் எடுக்கவும் லாயிக்கில்லை... காட்சிகளில் காட்ட முடியாத போதே எழுத்துக்கள் வருகின்றன....அங்கே ஒரு இயக்குனர் தோற்றுப் போகிறார்..

அய்யா புவியரசு, அடிக்கடி கூறுவார்.... "படம் முடிந்து கடைசியில் நாலு வரி எழுதி படத்தை முடிப்பவன் பேசாமல் மாடு மேய்க்க போகலாம்.." என்று.... அது நிஜம் என்று புரிய, தரமான சினிமாவை கூர்ந்து கவனிக்க வேண்டும்.... கலவி காட்சி கூட கதைக்கு தேவைப் பட்டால் மட்டுமே வைக்க வேண்டும்... தேவைப் படாவிட்டால்.. ஒரு முத்தக் காட்சி கூட திணிக்க கூடாது.... உலக அளவில் வயதுக்கு தகுந்தார் போல சினிமா எடுக்கப் படுகிறது.. நம் நாட்டில் மட்டும் தான் பிரமாண்டம் என்ற பெயரில் தொப்புளில் ஆம்லெட் போவடுதை குழந்தைகளோடு அமர்ந்து பார்க்க வேண்டி இருக்கிறது.... கவர்ச்சி... கண்ணியம்.. கட்டுப்பாடு.. கற்பு..ஒழுக்கம்... சண்டை... பாடல்... நகைச்சுவை... எல்லாமே இருக்கட்டும்.. அவை யாவும் கதைக்குள் இருக்கட்டும்.. உள்ளாடை உள்ளே தான் இருக்க வேண்டும். இன்றைய சில முட்டாள்கள் போட்டுத் திரிகிறார்களே அது போல வெளியே துருத்திக் கொண்டு தெரிந்தால்.. உள்ளிருக்கும் பொருளுக்கு மதிப்பில்லை...

கதை விவாதம்.. கதையை கை பிடித்து நடக்க பழக்கி விடும்... அழகான ஒரு பயணம்... அங்கே நாம் விட்டு விட வேண்டியது ஒன்றே ஒன்று தான்.... அது தன் முனைப்பு....தன் முனைப்பை பெயரில் மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்.. கதை விவாதத்தில் கொண்டு வந்தால்.. ஐந்து விரலும் சேர்ந்து முஷ்டி ஆகாது.. பலம் இழக்கும் கதையில் பலமான கதை நாயகனே நடித்தாலும்... "போடா மாங்கா" என்று சொல்லி விடும் திறமைசாலிகள் தான் இப்போது ஆடியன்ஸ். எல்லாக் கதையும் முடிவை நோக்கியே.... என்பது தானே கதைகளின் தத்துவம்.... மாற்றி யோசிப்போம்... மாற்றங்கள் தேவை.... வைரமுத்து சொன்னது போல... மாறியவை எல்லாம்... உயிரோடு.. மாறாதவை எல்லாம் மண்ணோடு...... இங்கு தகுதி உள்ளவையே தப்பி பிழைக்கும்.. மீண்டும் உலக விதி தான்......ஒவ்வொரு கதையின் தொடக்கமாகவும்....

திரை விரியும்...திரைக் கதையோடு


கவிஜி

எழுதியவர் : கவிஜி (17-Jan-15, 11:51 am)
பார்வை : 180

மேலே