அம்மம்மா---செதுக்கிய சிற்பம்தானோ?

சின்னப் பெண்ணான போதிலே
அன்னை இல்லாத அந் நாளிலே
அம்மம்மா என்னை தூக்கி வளர்த்தாள்
அவள் இடுப்பில் நான் இருப்பேன்.
முந்தானை கொண்டென் முகம் துடைத்து
முறுக்கும் சீடையும் கொண்டு வந்து
மொந்தைப் பழமும் முந்திரிக் கொத்தும்
தந்துண்ணக் கொடுத்திடுவாள்

என்னையே பார்த்து விழித்திருப்பாள்
கண்ணையே பார்த்து சிரித்திடுவாள்
முன்னர் இறந்த தனது அன்னையை
என்னில் பார்த்து மகிழ்ந்திடுவாள்
”சிந்தா மணியே சித்திரமே
சிறகு முளைத்த நித்திலமே”
சீராக உன்னை செதுக்கிடுவேனென
செப்பியே அவள் வளர்த்தாள்.

சின்னாளம் பட்டுச் சேலை கட்டி
சிறுகல் வளையல் எனக்கு மாட்டி
சீமைக்குப் படிக்க போவாய் என்றே
சிப்பி முத்தாய் வளர்த்தாள்.

அம்மம்மா இன்று இங்கு இல்லை
அம்மாடி அவள் எத்தனை அழகு
சிரித்த முகத்தில் செந்தூரப் பொட்டுடன்
செதுக்கிய சிற்பம் தானோ?

எழுதியவர் : (9-Jan-13, 4:45 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 300

மேலே