அலையின் இரைச்சல்--1

அலையின் இரைச்சல்
பிறவி பெருங்கடலில்.
……………………………………………………………
புதிராகவே புதைந்து போன
பொழுதுகள்
இருட்டு கருவறைக்குள்
மீனாக மிதந்த தருணங்கள்... .
…………………………………………………..
பத்து மாத காத்திருப்புகளில்
யாரால் நிர்ணயிக்கப்பட்டன
எந்தன் இலக்குகள்?
காத்திருந்த காலங்களில்
எப்படி கழிந்தன
என் பொழுதுகள்...?
புதிராகவேபுதைந்து போன
பொழுதுகள்
………………………………………………………
வரவேற்றது பூமி
தலைகீழாகவே......
வலியுனர்த்தினவா
அறுபட்ட தொப்புள்க்கொடி…
………………………………………………………………
எந்த அகராதியில்
புரட்டி பார்ப்பது
பல் முளைக்கும் முன்னே
ஒலித்த மொழிகளை.. ?
முதன் முதலில்
பூமி எச்சரித்தது எதனை...?
புதிராகவே புதைந்து போயின
பொழுதுகள்.
------------------------------------------------------------
ஜனன பிரவாகத்தில்
எந்தன் பிரவேசங்களில்
திசையின் நியதிகள்
யாரால் வகுக்க பட்டன...?
எதை நோக்கியது
எந்தன் பயணம்....?
விடை தெரியாமல்
வீணாக்கிய பொழுதுகள் தானா
விடலை பருவம்...?
…………………………………………………….
அந்தி சாயும் தருணங்களை போலவே
வந்தடையும் அந்திம காலங்களில்
புறப்பட்ட இலக்கினை
அடைந்திருப்பேனா...?
பயணிக்கும் திசை சரிதானா..?
விடை தெரியா
வினாக்களின் தொகுப்புகளா
வாழ்க்கை பக்கங்கள் ...?
விடை தேடும் காலங்கள்
ஆயுள் காலங்களா….!
……………………………………………………………
தூரத்தில் புள்ளியாய்
சொல்லப்பட்ட மரணம்
எதிரில் மிக அருகில்
சுமந்து வரும்
செய்திதான் என்ன....?
புதிராகவே கழிகின்றன
பொழுதுகளும்.........................

(இரைச்சல் தொடரும் )

எழுதியவர் : sindha (15-Jan-13, 10:16 pm)
பார்வை : 101

மேலே