காயும் ஈரம்......!(வினோதன்,புலமி)
ஐயிரு திங்கள்
பதியம் போட்டு
பகலிரவு பாராமல்
பத்தியங்கள் பாத்துண்டு
வைத்தியங்கள் பலகண்டு
"இறை"ப்பை இருட்டில்
துளிர்த்தெழுந்த சிசுவை
பிறப்பித்த பிரம்மாவிடம்
அம்மாவின் இதயக்காய
நஞ்சீரம் காயுமோ ..?(வினோதன்)
அவள் அர்ப்பணிப்பையும்
அழகாய் கோர்த்த ஆசைகளையும்
கண்ணுக்குள் கானலாக்கிவிட்டு
புகைப்பட சிரிப்பில் ஆறுதலாய் ,
ஏற்றிய விளக்கில் பிரகாசமாக
பதின்ம வயதில் தொலைந்த மகன்..!
காலத்தால் கரையாத சோகமோ
திடமாய் போட்ட அலங்கோலம்
பொழுதெல்லாம் கண்ணீரில் நனைய ,
கன்னங்களின் ஈரம் மட்டுமே காய்கிறது..!
(புலமி)