யாரடா இனக்கவர்ச்சி மிக்கவன்?!

பெண்ணைப்
பல தினங்கள் பார்த்து
பல மாதம் பேசி
பல வருடம் பழகி
பண்போடு காதல் உரைத்து
பின் அன்போடு கொண்ட களவோ
அது வயதில் வரும் இனக்கவர்ச்சியாம்...
சாதி பார்த்து
சமூக அந்தஸ்துப் பார்த்து
அப்பன்கள் வரதச்சனைப் பேசி
அம்மாக்கள் வசதிகள் பேசி
ஊரோர கோவிலில் சந்தித்து
அவரவர் அலைபேசி எண் பகிர்ந்து
ஆறேழு மாதம் கழித்து
அவ்வறிமுக புதுமுகத்தை மணந்து
அவனோடு அன்றிரவு கொள்ளும்
முதலிரவு உடலுறவோ
புனிதக் காதலின்
பொங்கிய ஆரம்ப உணர்சியாம் ...
என்னே இச்சமுதாயம் ..!
என்னே இதன் பண்பாடு..!

காதலுக்கு பின்னே புனிதக் காமமென்கிறேன் நான்,
காமத்திற்குப் பின்னே புனிதக் காதல் என்கிறீர்கள் நீங்கள்,
யாரடா இதில் இனக்கவர்ச்சி மிக்கவன்..?!!

இச்சிறுமையில் இருந்து
எனைக் காத்தருள்வாய் என் பாரதி அய்யா..!!

-ராம் K V

எழுதியவர் : -ராம் K V (18-Jan-13, 11:30 pm)
பார்வை : 155

மேலே