விழிகள் தேடும் விடியல்....
சாதிகள் பல இருந்தாலும்
சந்தையில் பொதுவானது
ஏழை பணக்காரன் எனும்
என்றுமே இருவேறு சாதிகள் !
ஏழை செல்வந்தன் ஆவதும்
பணக்காரன் ஏழை ஆகுவதும்
எதார்த்த வாழ்வில் மாறுவது
படத்திலும் அரசியல் மேடையிலும் !
வறுமைக் கோட்டின் எல்லையே
வீதியின் ஓரத்தில் வாழ்ந்திடும்
குடிசைகளை கடந்திடும் நமக்கு
கண்ணில் தெரியும் தொடக்கம் !
உணவே கனவாய் இருந்திடும்
உள்ளங்கள் உலவிடும் காட்சி
உலகில் கண்டிடும் கண்களை
உறுத்திடும் நெஞ்சில் நிறுத்திடும் !
முக வரிகளே இல்லா முகங்களில் கூட
முகவரியை காட்டிடும் வறுமையால் !
மூப்பை எய்திடா வயதினரும் அறியார்
ஏப்பம் என்றால் புரிந்திடா குப்பத்தினர் !
என்று வருமோ வளமான வருங்காலம்
எப்படி பெறுவது ஏற்றமிகு எதிர்காலம்
என்பதை நினைத்தால் எவரும் என்றும்
எழுதிடத் தெரியாது விடை நிச்சயம் !
பழனி குமார்