உண்டோ அடைக்குந்தாழ்

உண்டோ அடைக்கும் தாழ்?
(சிறுகதை)

நீர் நிலையில் கூட்டமாய் நின்று தண்ணீர் பருகிக் கொண்டிருந்த மான்கள் ஏதோ அரவம் கேட்க 'விருட்”டென தலையைத் தூக்கிப் பார்த்தன. அவ்வளவுதான் அடுத்த விநாடி உயிராசை உந்த மின்னல் வேகத்தில் ஓட ஆரம்பித்தன. கணப் பொழுதில் புதர் மறைவிலிருந்து வெளிப்பட்ட சிறுத்தை வெறித்தனமாய்த் துரத்தியது. கிட்டத்தட்ட எல்லா மான்களுமே தப்பி விட்ட நிலையில் ஏனோ அந்த ஒரு மான் மட்டும் நின்று திரும்பிப் பார்த்து விட்டு ஓடியது. அது செய்த அந்த மாபெரும் தவறு காரணமாய் சிறுத்தையின் கோரப் பல்லில் சிக்கி அதன் குடும்பத்திற்கு அன்றைய விருந்தானது.

தொலைக்காட்சியில் டிஸ்கவரி சேனலில் மூழ்கிக் கிடந்த தியாகராஜன் சமையலறையில் செல்வி எதற்கோ கத்திக் கொண்டிருப்பதை உணர்ந்து தொலைக்காட்சியை அணைத்து விட்டு எழுந்து வந்தார்.

'என்ன செல்வி…என்ன பிரச்சினை உனக்கு?” பவ்யமாய்க் கேட்டார்.

'அடடே…பரவாயில்லையே…இப்படியெல்லாம் கூட கேட்கத் தெரியுமா உங்களுக்கு?” அவள் பேச்சில் கிண்டல் வழிந்தது.

'பச்…விஷயத்தை மட்டும் பேசு….அநாவசியமா ஏதேதோ பேசாதே…”

'பேசலை சாமி… நான் பேசலை நிறுத்திக்கறேன்….ஆனா..ஊரு உலகம் எல்லாம் பேசுதே…அதை யாரு போய் நிறுத்தறது?” பேச்சில் பொடி வைத்தாள்.

'என்னடி பேசுது…ஊரு..உலகம்?” கடுப்பானார் தியாகராஜன்.

'ம்ம்ம்…வயசான காலத்துல கெழவனுக்கு இளமை ஊஞ்சலாடுதுன்னு ஆளாளுக்குப் பேசறாங்க”

குழப்பம் மேலிட நெற்றியைச் சுருக்கிக் கொண்டு செல்வியையே ஊடுருவிப் பார்த்தார்.

'உங்க அப்பாவைப் பத்தித்தான் சொல்றேன்….எந்நேரமும் அந்தச் சிறுக்கி கூடத்தான் பேச்சு….பாதி நேரம் அவ ரூம்லதான் இருக்கார்….அவ எங்காவது வெளிய தெருவுக்குப் போகும் போது கூட இவருதான் துணையாப் போறாராம்…பாத்தவங்க என்கிட்ட வந்து சொல்லிக் காறித் துப்பறாங்க”

'இதென்னடி புதுக்கதையாயிருக்கு…யாருடி இப்படியெல்லாம் கதை கட்டுறது?” ஆவேசமாகிக் கத்த ஆரம்பித்தார் தியாகராஜன்.

'த பாருங்க…யாரும் ஒண்ணும் சும்மா கதை கட்டலை….நெருப்பில்லாமப் பொகையாது…உங்களுக்கு சந்தேகமாயிருந்தா இப்பவே போங்க..போயி நேர்ல பாத்துட்டு வந்து பேசுங்க…உங்கப்பனோட லட்சணத்தை…” முகத்தை அஷ்ட கோணலாக்கி முகவாய்க் கட்டையை தோளில் இடித்துச் சொன்னாள் செல்வி.

சட்டென்று சட்டையை மாட்டிக் கொண்டு ஆவேசமாய்க் கிளம்பினார் தியாகராஜன்.

நாலு வீடு தள்ளி இருந்தது அந்த வீடு.

ஹாஸ்டல் ஒத்துக் கொள்ளவில்லை என்ற காரணத்தினால் கல்லூரி மாணவி ஒருத்தி அந்த வீட்டில் அறை எடுத்து தனியாகத் தங்கி வருகிறாள் என்பதும், அவள் பெயர் காயத்ரி என்பதும், அவ்வப்போது அப்பா அந்தப் பெண்ணுடன் பேசுவார் என்பதும் தியாகராஜனுக்குத் தெரிந்தவொன்றுதான். ஆனால். அதுவே இன்று மாபெரும் பேச்சாகி…மகா அசிங்கமாகி….குடும்பத்தின் மானம் மரியாதைக்கே பங்கமாகிக் கொண்டிருக்கின்றது என்பதைத்தான் அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

'ம்ஹூம்…இதை இதற்கு மேலும் வளர விடக்கூடாது….இன்னிக்கே இதுக்கொரு முடிவு கட்டியாகணும்”

அந்த வீட்டின் கேட்டை நிதானமாகத் திறந்து உள்ளே சென்று வாசலில் நின்று 'யாரு வீட்டுல?” மிரட்டலாய்க் கேட்டார்.

வெளியே வந்த காயத்ரி அவரைப் பார;த்ததும் தூக்கிச் செருகியிருந்த நைட்டியை சட்டென்று கீழிறக்கி 'வாங்க சார்…உள்ளார வாங்க” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

'த பாரும்மா…நான் ஒண்ணும் உள்ளார வந்து உட்கார்ந்து விருந்து சாப்பிட வரலை….அந்தக் கெழம் உள்ளார இருந்தா வெளிய வரச் சொல்லு…”

பெற்ற தகப்பனை அவர் 'கெழம்” என்று சொன்னது காயத்ரிக்கு சற்றுக் கோபத்தை உண்டாக்கி விட 'என்ன சார் நீங்க?….படிச்சவரு…பெரிய உத்தியோகத்துல இருக்கறவரு..பெத்த தகப்பனைக் கெழம்ன்னு சொல்றீங்களே…இது நியாயமா சார்?” சற்றுக் கோபமாகவே கேட்டாள்.

'ஓ……அதைக் கெழம்ன்னு சொன்னா உனக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருதாக்கும்….” அசிங்கமான அபிநயத்துடன் தியாகராஜன் கேட்க,

'உங்கப்பா இப்ப இங்க இல்லை…பால் பூத் வரை போயிருக்கார்”

'ஓ!...பால் வாங்கி வரப் போயிருக்கார்….பால் மட்டும்தானா…இல்லை பழமுமா?”

'ச்சீய்…” என்றவள் அவரை அருவருப்பாகப் பார்க்க,

'ஏம்மா…உன் மனசுல நீ என்னதான் நெனைச்சிட்டிருக்கே?…பாத்தா ரொம்ப சின்னப் பொண்ணாட்டம் இருக்கே…பண்ற வேலையெல்லாம் பெரியப் பெரிய வேலையாயில்ல இருக்கு”

'இப்படியெல்லாம் பேச உங்களுக்கு அசிங்கமாயில்லையா?”

'ம்…நீங்க ரெண்டு பேரும் பண்றதை விடவா இது அசிங்கம்?” என்று தியாகராஜன் கத்தலாய்க் கேட்கும் போது அவரது தந்தை வெள்ளிங்கிரி வந்து விட, தன் கோபத்தை அவர் மேல் கொட்டினார்.

'ஏம்பா…உங்களுக்கென்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா?…இந்த வயசுல இதெல்லாம் தேவையா?”

பதிலேதும் பேசாமல் அவரைக் கையமர்த்திய பெரியவர் தன் கையிலிருந்த பால் பாக்கெட்டை காயத்ரியிடம் கொடுத்து விட்டு மகனுடன் அமைதியாய்க் கிளம்பினார்.

வீட்டிற்குள் வந்ததும் முதல் வேலையாக பாண்டிச்சேரியிலிருக்கும் தன் அண்ணன் ரங்கநாதனுக்குப் போன் செய்து விஷயத்தை ஒன்றுக்கு ரெண்டாகச் சொல்லி வைத்தார் தியாகராஜன். 'இந்த ஏரியாவுல குடியிருக்கவே முடியாது போலிருக்கு…மானம் மரியாதையெல்லாம் கப்பலேருது….'காலம் போன கடைசில கெழவனுக்கு காலேஜ் பொண்ணோட காதல்”ன்னு ஊரே கை கொட்டிச் சிரிக்குது…நீ எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரமா வாண்ணே…இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்…”

'கொஞ்சம் பொறு தியாகு…ரெண்டே நாள்ல நான் அங்க வர்றேன்…வந்து கவனிச்சுக்கறேன்…அந்தச் சிறுக்கியையும்…நம்ம கெழத்தையும்…” மறுமுனையில் அந்த ரங்கநாதனும் டென்ஷனாகிக் கத்தினார்.

ஆனால்….

இரண்டு நாட்களுக்குப் பிறகு பாண்டிச்சேரியிலிருந்து வந்திறங்கிய வெள்ளிங்கிரியின் மூத்த மகன் ரங்கநாதனுக்கு மாபெரும் அதிர்ச்சிதான் காத்திருந்தது.

'என்ன தியாகு…என்ன சொல்றே நீ?…அப்பாவும் அந்தப் பொண்ணும் ஓடிப் போயிட்டாங்களா?”

'ஆமாண்ணே…ஊரே பேசுது…வெளிய தலை காட்ட முடியலை…”

வெறும் வாயையே மணிக் கணக்கில் மென்று தீர்க்கும் தியாகராஜனின் மனைவி செல்விக்கு அந்த விஷயம் பெரிய தீனியாகப் போய் விட ஆசை தீரக் கற்பனைகளையும் சேர்த்து அரைத்துத் தள்ளினாள்.

'அன்னிக்கு ரெண்டு பேரையும் சினிமாத் தியேட்டர்ல வெச்சுப் பார்த்ததாய் கோமதி கூடச் சொன்னாள்…ரெண்டொரு தடவ லாட்ஜூக்குக் கூடப் போயிட்டு வந்ததாப் பேச்சு அடிபடுது”

செல்வியின் பொய்ப் பிரச்சாரம் சகோதரர்களின் கௌரவத்தைப் பாதிக்க 'ச்சீய்…வாயை மூடுடி சனியனே… ” என்று கத்தி மனைவியை அடக்கிய தியாகராஜன் அண்ணன் பக்கம் திரும்பி 'அண்ணா….அந்தப் பொண்ணோட சொந்த ஊரு திருச்சி..அநேகமா அவ அப்பாவை அங்கதான் இழுத்திட்டுப் போயிருக்கணும்…அவ குடியிருந்த வீட்டு ஓனர்கிட்ட அவளோட திருச்சி முகவரி வாங்கிட்டு வர்றேன்…நீ கௌம்பத் தயாராயிரு”

அடுத்த அரைமணி நேரத்தில் சகோதரர்கள் இருவரும் திருச்சி பஸ்ஸில் இருந்தனர்.

ஒரு வழியாய் அலைந்து திரிந்து அந்த முகவரியை அவர்கள் கண்டு பிடித்த போது இரவு ஏழு மணியாகி விட்டது.

அதிரடியாய் வீட்டிற்குள் நுழைந்தனர்.

சோபாவில் அமர்ந்து நிதானமாய் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த காயத்ரியிடம் 'எங்கேடி உன் காதலன்…அதான் எங்கப்பன்?” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு மிரட்டலாய்க் கேட்டார் தியாகராஜன்.

காயத்ரி சற்றும் அஞ்சாமல் இருவரையும் மாறி மாறிப் பார்க்க,

அவளின் அந்த அலட்சியத்தால் கோபமுற்ற மூத்தவன் ரங்கநாதன் பாய்ந்து சென்று அவள் முடியைக் கொத்தாகப் பற்றி 'எங்க குடும்ப மானத்தைக் குழி தோண்டிப் புதைக்க வந்த சனியனே…சொல்லுடி…எங்க அந்தக் கிழட்டுப் பொணம்?”

காயத்ரி அதே நிதானத்துடன் ஒரு அறையைக் காட்ட இருவரும் ஆக்ரோஷமாய் ஓடினர்.

அங்கே……

அவர்களின் தந்தை வெள்ளிங்கிரியும் பாண்டிச்சேரியில் மூத்த மகன் ரங்கநாதனுடன் இருந்து வரும் தாயார் லட்சுமியும் ஒன்றாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க,

சிலையாகிப் போயினர் இருவரும்.

'டேய்…ரங்கு…தியாகு…நீங்க ரெண்டு பேரும் எப்படிடா இங்க?” திடுதிப்பென்று இரு மகன்களையும் ஒரு சேரக் கண்டுவிட்டு ஆனந்தத்தில் லட்சுமி கேட்டாள்.

அவர்கள் பதில் சொல்ல இயலாது வாயடைத்து நிற்க, சிரித்தபடி இடையில் புகுந்தாள் காயத்ரி 'அம்மா உங்க மகன்க ரெண்டு பேரும் காலேஜ் பொண்ணோட ஓடிப் போயிட்ட அப்பாவைத் தேடி வந்திருக்காங்க”

லட்சுமி ஏதும் புரியாமல் விழிக்க,

'அம்மா…இவள நம்பாதே...நம்ம அப்பாவுக்கும் இவளுக்கும் ஒரு தப்பான உறவு ரொம்ப நாளா இருந்திட்டிருக்கும்மா..ஊரே சிரிக்குது!…பாரேன் இப்பக்கூட இந்தப் பொண்ணுதான் அப்பாவை இங்க தன்னோட சொந்த ஊருக்கு இழுத்திட்டு வந்து தன்னோட வீட்டிலேயே வெச்சிருக்கறதை” ரங்கநாதன் கொக்கரித்தார்.

'ச்சீய்…வாயைக் கழுவுடா…யாரைப் பத்தி என்ன பேசுறே?….இந்தப் பொண்ணு எங்களைப் பொருத்தவரை தெய்வம்டா. ஏண்டா..உன்கிட்ட நான் 'எம்புருஷனைப் பார்க்கணும் போலிருக்கு”ன்னு எத்தனை தடவ கெஞ்சியிருப்பேன்…காதுல வாங்கினியா?…பாவிப்பயல்க…ரெண்டு வருஷமா என்னையும் எம்புருஷனையும் ஒருத்தரை ஒருத்தர் கண்ணுல கூடப் பாக்க விடாமப் பிரிச்சு வெச்சிட்டீங்களேடா…” சொல்லும் போதெ லட்சுமியின் கண்களில் நீர்

'இல்லம்மா..அது வந்து…” சின்னவன் தியாகராஜன் சமாளிக்க முனைய,

வெள்ளிங்கிரி சீறினார், 'நிறுத்துடா நீ மட்டும் என்னவாம்….'அம்மாவைப் பார்க்கணும் என்னைப் பாண்டிச்சேரிக்குக் கூட்டிட்டுப் போடா” ன்னு நான் கேட்டப்பவெல்லாம் 'ம்…கூட்டிட்டுப் போறேன்!...கூட்டிட்டுப் போறேன்!”ன்னு சொல்லியே ரெண்டு வருஷம் இழுத்தியே…மறந்திட்டியா?…இதோ இந்தப் பொண்ணு...யாரு பெத்த புள்ளையோ! எங்களோட மனசைப் புரிஞ்சுக்கிட்டு…எங்க உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து…இதனால தன்னோட பெயர்தான் கன்னாபின்னான்னு கெட்டுப் போகுதுங்கறதைப் பத்தித் துளிக் கூடக் கவலைப்படாம..நாங்க இங்க சந்திக்க ஏற்பாடு செஞ்சு எங்க வேதனையைப் போக்கினாளே…இவளுக்கு நாங்க இந்த ஜென்மத்துல என்ன கைம்மாறு செய்ய முடியும்?”

அந்த வயோதிகத் தம்பதியர் இருவரும் தன் பேத்தி வயதே ஆன காயத்ரியைக் கையெடுத்துக் கும்பிட்டனர்.

தங்கள் தவறினை உணர்ந்த மகன்களிருவரும் தலை குனிந்து நிற்க அவர்களிடம் வந்த காயத்ரி,

'சார்…ஒரு கணவனும் மனைவியும் இளம் வயசுல இணை பிரியாம வாழுறப்போ எவ்வளவு சந்தோஷமும் திருப்தியும் அடைவாங்களோ…அதை விடப் பலமடங்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் அவர்கள் அடைவது முதுமைக் காலத்துல சேர்ந்து வாழுறப்பத்தான்…அவங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா இருக்கும் போதுதான் அவங்களுக்கு முதுமையின் தாக்கமும்…வியாதிகளின் தாக்கமும் குறைவாகத் தெரியும்…மனபலம் அதிகரிக்கும்…பிரிச்சு வெச்சா மனச் சோர்வுதாங்க ஏற்படும்…அவங்க ஒருத்தருக்கொருத்தர் பேச்சுத்துணை மட்டுமல்ல…அன்புத் துணை….ஆறுதல் துணை…அக்கறைத் துணை…எல்லாமே…அவங்களைப் போய் வருஷக் கணக்குல பிரிச்சு வெச்சு….போங்க சார் பெரிய பாவத்தைப் பண்ணிட்டீங்க…அதனால அந்தப் பாவத்துக்குப் பிராயச்சித்தமா…இனியாவது அவர்களைச் சேர்ந்து வாழ விடுங்க…ப்ளீஸ்”

வெளியே விண்ணில் கருமேகங்கள் திரண்டு மழை பொழிய ஆயத்தமாயின.


(முற்றும்)

எழுதியவர் : முகில் thinakaran (24-Jan-13, 2:50 pm)
சேர்த்தது : mukil dinakaran
பார்வை : 94

மேலே