கடற்கரையோர காதலர்களே!
கடற்கரை ஓரத்தில்
காதலர்கள் பலர்
காதல் செய்து மகிழ்கின்றனரோ?
காமம் கற்றுக் கொள்கின்றனரோ?
பட்டப் பகல் நேரத்திலே
பலர் நடமாட்டம் மத்தியிலே
பகல் கூத்து செய்கின்றீர்களே
பண்பாடு அறியலையோ?
சிறு இடம் கிடைத்தாலும்
சிறுநீர் கழித்த இடமாயினும்
சிறு முத்தத்திற்கு ஏங்கி
சீரழிந்து போகின்றீர்களே
மறைக்க வேண்டியதை விடுத்து
முகங்களை மறைக்கின்றீர்களே..
வெயிலுக்கு மறைகின்றீர்களா?
வெளியே தெரியாமலிருக்க மறைகின்றீர்களா?
இயற்கை அளித்ததுதானே காமம்-அதை
இடம் கண்டு அடக்குவீர்களோ..?
இல்லை இல்லையென
இழிவாக போவீர்களோ..?
நான்கு சுவற்றுக்குள் செய்ய வேண்டியதை
நாடறிய செய்கின்றீர்களே..?
நாணத்தை துறந்ததென்ன..?
நாயுக்கும் உங்களுக்கும் வித்தியாசமென்ன..?
கல்வி கற்கும் வயதினிலே..
கால் வயிற்று உணவிற்கு
கடலை சுண்டல் சுமக்கும் சிறார்களை
காதலர்களே! காணுங்களேன்!
ஏழ்மையென நாட்டில் பலரிருக்க
எப்படித்தான் உடல் இச்சைக்கு
பிச்சை கேட்கின்றீர்களோ..?
எந்நேரத்திலாவது அவர்களை நினைத்ததுண்டா?
முன்சென்று உதவ துணிந்ததுண்டா?
கடற்கரையில் அமர்ந்து கொண்டு
கலவு பல செய்கின்றீர்களே..?
கடலுக்கு அப்பால் உள்ள
காயம்பட்ட நம்மினத்தை நினைத்ததுண்டா?
இவ்வகை காதல் கலாசாரத்தை
நீங்கள் கற்றது எவ்விடத்தில்
ஊடகத்தை உதைக்கலாமா?
திரைப்படக்காரர்களை தீயிடலாமா?
கடற்கரைக்கு வரும் காதலர்களே..
கடலை ரசித்துவிட்டு போங்கள்..!
காமம் தீர்க்க வந்தோமெனில் ?
கட்டித் தாருங்கள் விடுதியென
கடிதம் எழுதி அனுப்புங்கள் அரசுக்கு!