வாழ்வியற் குறட்டாழிசை.. 6 (கோபம்.)

வாழ்வியற் குறட்டாழிசை.. 6

கோபம்.


பெரும் மனித சக்தியல்ல கோபம்
உருப்படாத மாபெரும் தவறு.

அறியாமையின் திரள்வு பெரும் கோபம்.
வெறியாகி சுயத்தைத் தின்றிடும்.

தனியன் கோபம் உருண்டு திரண்டு
மனிதனின் குடும்பப் பகையாகிறது.

குடும்பப் பகை உருண்டு திரண்டு
சமூகம், நாட்டுப் பகையாகிறது.

வன்முறை நிறைந்த தீவிரவாதத்திற்குப் பெரும்
கோபமே முதலான படியாகும்.

கோபமொரு சதுரங்கம். காய் நகர்த்தலில்
பகையை நட்பாக்குவோன் வெற்றியாளன்.

அடுத்தவர் மீது ஏவும் கோபம்
தொடுத்தவருக்கே பாதிப்பு உருவாக்கும்.

கோபம் அடுத்தவருக்கு வலி ஏற்படுத்துவதில்
கோபக்காரன் மிக மகிழ்வான்.

மதகௌரவம், கொள்கைகள் நிலையூன்றத் திணிக்கும்
கோபம், வன்முறைக்கு அழைக்கும்.

கோபத்திற்கு இன்பத்தை விலையாக்குதலிலும் அமைதியாக
இருக்கப் பழகுதல் நன்மையாகும்.

நாம் கோபப்படும் போது நம்
நல்ல குணாதிசயங்களை மிதிக்கிறோம்.

கோபம் ஒரு செய்தி, அதன்
காரணத்தைக் கண்டிடல் அவசியம்.



வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-5-2011.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். (19-Feb-13, 1:41 am)
பார்வை : 155

மேலே