தூய தமிழைப் பேணு என்றால்...
எந்த ஆளுக்கும்
விரும்பாத ஒன்றின் மீது
விருப்புக்கொள் என்றால்
வெறுப்பைத் தான் பரிசாகத் தருவார்கள்!
நானொரு முட்டாள்
தூய தமிழைப் பேணு என்றேன்...
நாங்க படுற பாட்டுக்குள்ளே
இவரு ஒருத்தர்
தூய தமிழைப் பேணு என்கிறரு என்று
பல ஆளுகள்
பலம் கொண்ட மட்டும்
என் மீது
எரிந்து விழுந்த போது தான்
எனக்கும்
பிறரது வெறுப்புப் பரிசாகக் கிடைத்ததே!
தம்பி, தங்கைகளே!
இந்தப் பழசு(கிழடு)
தூய தமிழைப் பேணு என்றழைத்தாலும்
உந்தப் பழங்கிடையனின் கதையை
குப்பையில போடு என்று இருக்காதீங்க...
நாம் யாரென்றால்
தமிழன் என்று முழங்க
விரும்பியோ விரும்பாமலோ
தூய தமிழ் பேணுவதை
விரும்பித் தான் ஆகவேண்டுமே!
தன் தாய் மொழியை
வெளிப்படுத்த முடியாத ஓராளை
விலங்குகளுக்குள் சேர்க்கலாம் என்றால்
"கீ... கீ..." என்று கிளியும்
"கா... கா..." என்று காகமும்
"கூ... கூ..." என்று குயிலும்
"கொக்... கொக்..." என்று கோழியும்
"மாஆய்... மாஆய்..." என்று ஆடும்
"இம்மாஆ... இம்மாஆ..." என்று மாடும்
இப்படித் தான்
அஞ்சறிவுள்ள எல்லாம்
தாய் மொழியைப் பேச;
தாய் மொழியைப் பேசாத
ஆறறிவுள்ள நம்மாளுகளை
எங்கே யாரோடு சேர்ப்பது?
பிஞ்சுகளே!
பிஞ்சிலே பழுத்ததுகளே!
என்னப் போன்ற
வெம்பிப் பழுத்த
பழங்கிழங்கள்
தூய தமிழைப் பேணு என்றால்
என்ன தான்
பதிலைச் சொல்லப் போறியள்?!
எனது yarlpavanan dot tk தளத்திலிருந்து பொறுக்கிய கவிதை இது.