அப்பாச் சுட்டி.
ஆறேழு வருசமிருக்கும்
ரெண்டு குடும்பமும் பேசி
அம்மாவுக்கும் அத்தைக்கும்
குழாயடியில் சின்ன பேச்சு முற்றி
பெரிய சண்டையாகி குடும்பம் பிரிஞ்சி போச்சு
பல வருடங்கழித்து சித்தி மகள் கலியாணத்துக்கு
கையில் குழந்தயொடு வந்த அக்காவை
எதிரெதிர் அமர்ந்து
ஊமைச்சந்திப்போடு இருக்கையில்
அக்கா மகனைப்பார்த்த அம்மா
காதருகே வந்து மெல்ல சொல்வாள்
அப்பா மாதிரியே இருக்கானே என்று,
திருமணம் முடிந்து ஊர்திரும்பியதும்
வெறிச்சோடிய கல்யாணமண்டபமாய்
அவ்வப்பொது நெஞ்சிலொரு வெறுமை படரும்
சந்தித்து எதுவும் பேசமுடியாத பொழுதெண்ணி,
வழியெங்கும் வெவ்வெறு குழந்தைகளை பார்க்கிறபோதெல்லாம்
இப்பாடியே கூற ஆரம்பித்தாள் அம்மா
மாசிக்களரிக் கொடைக்கு வந்த பேரன்
யாருமற்ற தெருவில்
அம்மாவைப்பார்த்து ஆச்சியென்றதில்
பழையதை நினைத்து
பொலபொலவென்று அழுது தூக்கி கொஞ்சினாள்
வீட்டுக்கழைத்து மாலைமாட்டப்பட்ட
அப்பா புகைப்படத்தைக்காட்டி
இது யாரென்றவளின் இதயம் பதில்கேட்கத் துடிதுடித்தடங்கியது
கழுத்தறுக்கப்பட்ட கோழியைப் போல
அம்மாவுக்குத் தெரியாமல்
அப்பா கொடுத்த தங்கத்தாயத்தை பிடித்துக்காட்டினான்
அப்பாச் சுட்டி.