கூரிய மொழி

சின்ன வயதிலிருந்து
பார்த்து வருகிறேன்
இரவு சாப்பாடு போட்டு தூங்கிற வரை
அமைதியாக இருக்கும் வீடு
திடீரென அம்மாவின் அழுகைக்குரல் கேட்கும்
ஏதேதோ காரணத்தால் விழும் அடி
அப்போது ஒன்றுமே புரியாது
முந்தானை பிடித்து அம்மாவோடு
ஒதுங்கிய சிலகாலம்
அப்பாவை பிடிக்காமல் போகும்
சில கால இடைவெளியில் அன்னியோன்யம்
நெருங்கிப் பயணிக்கும் இருவருக்கும்
சில காலம் துடுப்பற்ற ஓடமாய் கரையொதுங்கி
தவிப்பாள் என்னோடு
எத்தனை வலிகள்
எத்தனை அவமானம் சுமந்தவள்
ஒரு பொதும் மறுத்துப் பேசியதில்லை
தனியார் நிறுவனமொன்றில் வேலைபார்த்து
ஊர் திரும்பிய பின்னோரு நாள்
கண்முன்னே பளாரென்று அம்மாவின் கன்னத்தில்
அப்பாவின் ஆதிக்க கோபம்
முதல் தடவையாக‌
மறுத்துக் கூறிய மொழி
வளர்ந்த பிள்ளைகள் முன்
அடி வாங்குவது நல்லாவாயிருக்கும்.

எழுதியவர் : -கவிஞர்வாலிதாசன்- (26-Feb-13, 2:32 am)
பார்வை : 91

மேலே