காற்றுக்குள் பிரவேசிக்க முயற்சி
காகிதம், நூல்கண்டு, தென்னங்குச்சி
காற்றுக்குள் பிரவேசிக்க முயற்சி
சோற்றுப் பானையை திறந்து
சுடு சோற்றைப் பிசைந்து
பசையாக்கினோம்.....
அழகிய பட்டம் உருவாக்கினோம்!
வெட்டவெளி மைதானத்தில்
கூட்டமாய் சென்று காத்தாடி பட்டம்
கலர் கலராய் பறக்கவிட்டபடி
விண்ணையே அண்ணாந்து
விழிபிதுங்க பார்வையிட்டோம்....
பட்டங்கள் உயர உயர பறந்தபடி
எங்கள் மனங்களில் குதூகலம் !
சில காத்தாடி பட்டங்களில்
தந்திகளும் அனுப்பப்பட்டன.....!
மாஞ்சா தடவிய நூல்கண்டுகள்
அஞ்சாமல் பதம்பார்த்தன
உயரும் பட்டங்களின் எண்ணிக்கையை !
பசிவேளை வந்தாலும்
பட்டங்களை இறக்க மனமின்றி
மரத்தில் கட்டிவைத்து அழகு பார்த்தோம்!
எப்போதாவது மின்கம்பிகளில்
சிக்கித்தவிப்பதுண்டு
நூலறுந்த பட்டங்கள்!
இப்போதெல்லாம் வேலை கொடுக்காமலே
பெட்டிக்குள் சிக்குண்டு
சிறைபட்டுப்போகின்றன......
பல்கலைப் பட்டங்களும் !
..........கா.ந.கல்யாணசுந்தரம்.