பெண்ணே.... நெஞ்சில் உறுதி.... உறுதி வேண்டும்
அஞ்சி நடுங்கியே வாழும்
மாதரினமெல்லாம்
வீறுகொண் டெழவேண்டும்
வெஞ்சினம் கொண்டே அவரும்
வன் கொடுமை யாளர்களை
ஏறி நெஞ்சில் மிதிக்க வேண்டும்
மெல்லினமாம் மகளிரினமெல்லாம்
வல்லமை நெஞ்சினில் கொண்டே
மா களிறாகிட வேண்டும் - அவர்
யானைகொள் மதமும் கொண்டே
அணுகிடும் அரக்கரையெல்லாம்
புரட்டி வதமும் செய்திடல் வேண்டும்
பாட்டு பரதம் பிற கலையெனவே
பயின்றிடும் பாவையரெல்லாம்
தற் காப்புகலை பயிலவேண்டும்
போர்வீரனை போலாகிட வேண்டும்
வாளோடு ஆயுதமேந்தி - வீணரை
வெட்டியே சாய்த்திடல் வேண்டும்
கூரிய நகமும் கொண்ட பற்களும்
இனி பெண்ணினதிற்கெல்லாம்
ஆயுதம் என்றாகிட வேண்டும்
உயிரினும் மேலாம் கற்பை அழிக்கவே
எண்ணிவருபவன் கதறியழுதிட வேண்டும்
அவனுடலில் பெண்ணே - உன்
பல்நகம் பதியவும் வேண்டும்
தவறுகள் செய்யும் காமுகனின்
அவயங்கள் அறுபட வேண்டும்
மிருகப் பார்வை கொண்டவன்
விழிகளிரண்டும் நீக்கப்பட வேண்டும் - இவை
தண்டனைகளாகிட வேண்டும்
தண்டனை சட்டங்களாகிட வேண்டும்
பதுமை பெண்களாய் இருந்தது போதும்
புதுமை பெண்களாகிட வேண்டும் - எந்த
எமனையும் எதிர்கொள்ளல் வேண்டும்
வன் கொடுமைகள் நீங்கிட வேண்டும்
பெண்ணே உன் மனதில் என்றும்
உறுதி... உறுதி... வேண்டும்...
வேண்டும்... வேண்டுமென....
வேண்டிய யாவும்
செயல்முறை யாகிட வேண்டும்
பெண்ணே உன் வாழ்வு
நலம் காணுதல் வேண்டும்
நலமே நாளும் என்றாகிட வேண்டும்...
---------------------------------------------------------
மகளிர் தின வாழ்த்துக்களுடன்,
சொ. சாந்தி