மாந்தோப்பில் தவிக்குமோர் காவல்...............!
![](https://eluthu.com/images/loading.gif)
நீளுகின்றதோர் பயணம் உன்னோடு நிலவே !
நிலவொளியில் நனைகின்ற பனியும் கிலியும்
கிலிபிடித்த கிழவனின் நடுங்கும் சதையும்
சதைபிடித்த மாங்கனிகளின் காவல் பரவலில்
பரவுகின்ற பார்வைக்குள் கலையாத களைப்பும்
களைத்துக் கூடு தேடும் பறவைக் கூட்டங்களும்
கூட்டமாய் கூடிவிட்ட மாமரங்களின் நடுவே
நடுநிலையாய் ஒரு மனம் அலைவுறுகையில்
அலைவுறும் நோக்கங்கள் யாவும் எதிர்பார்ப்பினில்
எதிர்பார்த்தவோர் உழைப்பின் பலனை எச்சரிக்க
எச்சரித்த வேளைகளில் எழுந்து நிலைநின்றபடியே
நிற்கின்ற கவனத்தைச் சிதைக்கும் தள்ளாட்டத்தில்
தள்ளாடும் வயதோடு தனியொரு போராட்டமாய்
போராடும் நினைவுகளில் வறுமையும் இழப்புமாய்
இழப்பினில் மீண்ட துணிவுடன் நம்பிக்கையுமாய்
நம்பிக்கை பொய்க்காதென்ற திடமான உறுதியில்
உறுதியாய் நித்திரை தொலைவது தொடர்கையில்
தொடருமந்த சோதனைகள் களையும் வகையிலே
வகையொன்றாய் வாட்டிய அல்லல்களும் தீண்ட
தீண்டும் இருளும் ஒரு விடியலுக்கே நீள்கின்றதோ