பகுதி 1 - அனைவரும் தமிழ் கற்போம்.

தொடக்கத்தின் நோக்கமாக ழ, ள, ல, கரங்களை விவரித்து காண்போம்.

அவற்றின் சிறப்புகள், உபயோகங்கள், தனித்தன்மை ஆகியவற்றை தனியே கண்டுவிட்டு, பின் தடுமாற்றம் தரும் இடத்தில் இவற்றை ஒரு சேரப் பார்க்கலாம்.

முதலில் நிதானிப்பது
தமிழின் சிறப்பு
ழ எனும் எழுத்திலேதான்!

ழ எனும் உச்சரிப்பை பயிற்சியில் முயன்று
சிறப்பாய் செய்தோம் எனிலே
தமிழின் உயிரே அழகாய் ஒளிரும்.
தமிழின் வாழ்வும் இரட்டிப்பு ஆகும்.

தமிழின் சிறப்பாம் ழ எனும் உச்சரிப்பை
சரியாய் செய்தால் அவர் ஒரு மலையாளி
என்றோர் எண்ணம் எழுவது இயல்பாய்
சூழல் அமையும் இழிநிலை வந்து
அழிநிலை நோக்கும் தமிழர்நிலைதான்
எள்ளிடத் தகுமோ? ஏனிந்த அவலம்?

ழ எனும் உச்சரிப்பு எளிதானதே!
முயன்று பயின்றால் முன்னேறலாமே!

விளையாட்டாய் தொடரும் பயிற்சினாலும்
விளைவுகள் பலவும் பலன் தந்திடுமே.

தமிழின் சிறப்பின் ஆணிவேரே
இந்த ழ எனும் உச்சரிப்பு மட்டும்தானே!

அனுசரிப்பு என்பது பழக்கத்தில் வருவது
பயிற்சி என்பது முயற்சியில் வருவது

முயன்று பார்ப்போமா தமிழின் பற்றாலே!

தமிழ் பற்றால் ழ பற்றி அதன் உச்சரிப்பை பின்பற்றி
சில விளையாட்டுகள் ஆடலாமா?

ஊஞ்சலாய் உச்சரிப்பை பெண்டுலம்போல ஆட்டலாமா?
வாருங்கள்!
விளையாட்டாய் தமிழை வீதி தோறும் கற்போம்.

நாக்கை மேல்நோக்கி உள்புறம் மடக்கி
நிறுத்த இடமின்றி மேல்தாடை தொட்டு
தொண்டையில் ஒலித்தால் வரும் இந்த ழ கரம்

முயன்று பார்த்து பயின்று சொல்லுங்களேன்.

மேலும் பயிற்சிக்கு சில பல வார்த்தைகள்
வரிசையாய் இங்கே தங்களின் சேவையில்

அழகு என்பதும் ஆழம் என்பதும் தமிழில் வரும் மொழிவழி சொல்லே!

அழாதே என்பதும் ஆழாக்கு என்பதும் வழுவின்றி பயில தமிழ்தரும் சொல்லே!

அழிவு என்பதும் ஆழிப்பேரலை என்பதும் மொழிதரும் செழிப்பின் மோகம்தானே!

அழைப்பை விழைவதும், பிழைப்பில் விழிப்பதும்,
மழையில் நெகிழ்வதும். நெகிழ்வில் குழைவதும்
மகிழ்வில் தழைவதும், அநீதி இழைப்பதும்,
பிழையில் உழல்வதும், மிருகம் தழை உண்பதும்
படைப்பில் இவை இயல்பே.

பழகாத குழந்தை அழகாய் பொழியும்
செழிப்பு மொழியே தமிழில் மழலை

அழும் ஒரு குழந்தை அழிக்கும் நம் அகந்தை

அழுகும் பழங்கள் அழுக்கின் குணங்கள்

ஒழுக்கம் காக்கும் எழுச்சி மொழிகள்

வழுக்கும் பணியில் செழிக்கும் மனமே
தொழுகைக்கு உரிய பழுதில்லா குணமே

கழித்தல் என்பது ஒழித்தல் எனவும் பொருள்படும்

எழுதுயில் வழியில் ஏழிசை முழங்கின்
ஒழிந்திடும் அழுக்கும் ஒழுகும் சிந்தனையில்

எழுமின் விழிமின் என்றார் ஒருமுனி அந்த
வழிவிடும் மொழியால் குழந்தையும் செழிக்கும்

கழிநிலை கடந்து எழில் வழி கொள்ளும்
தமிழர் வாழ்வின் தலைநிமிர் தொழில்தான்
உழவு என்பதோர் எழுச்சியின் பொழிவே.
உழுதல் எனும் ஒரு ஊழியம்தானே
எழுதும் தமிழின் விழிமணி் ஆகும்

சுழி எனும் ஒரு நிலை சூழ்வதாலே
சூழ்ச்சியால் அழிவதாய் வழிகொளல் தகுமோ

கிழிபெறும் துணிகள் ஒழிப்பதனாலே
செழிப்புறும் மானம் வழிமுறை காண்போம்.

கிழம் என பழிக்கும் மனம் புறந்தள்ளி
மகிழும் அழைப்பை பொழுதென்றும் போற்றி்
குழுமனம் வகுப்போம். தொடர்விழா படைப்போம்!

கூழாங்கற்கள் கேழ்வரகுப் பயிர்கள்
கோழிச்சண்டை கொழிக்கும் செல்வம்
சோழர் பொன்முடி தோழமை அரசு
செழிக்கும் தமிழின் பொழிப்பயன் தானே!

வாழ்வினில் நிகழும் ஊழ்வினை பயன்கள்
பழிவரும் வழிகள் ஒழித்திட துணிவோம்

வழித்தடம் தந்த முழுமுதற் தமிழர்
செழித்திடும் மொழிவளர் நிகழ்வுகள் தம்மை
பழித்திடும் சிந்தனை கழிப்பிடம்தானே!

கிழமை என்பது வாரத்தின் நாளே

கீழ்த்தர புரிதல்கள் குழவியின் கொடுக்காம்
கீழான செயல்கள் பழிமொழி சொற்கள்
பொழிந்தொழிவோர்கள் செழித்திட மாட்டார்!

பழிதொழில் செய்யும் கழிநிலையாளர்
விழிகள் பொழியும் இழிநிலை கண்ணீர்

மழித்தல் கழித்தல் சுழித்தல்
பழித்தலில் செழித்தல், பிறர் உழைத்தலை இழித்தல்
இவை ஒழித்திட தேவை அழுத்தமான விழித்தல்

வழியும் மொழியும் அறியோர் சிறியர்
குழியும் சுழியும் கழியும் பகைவர்
பிழைகாண் செழியர் மொழிவர் பழிகள்

ஒரு தோழி மறு கோழி பெறும் நாழி
நீ வாழி எனும்சேதி வருமோடி?

ஏழ்மையிலே வாழ்கையிலே தோழமையே
தோழமையில் ஏழ்மையாக வாழ்ந்திடாதே

வாழ்க்கையிலே கோழையாகும் தோழமையே
தோழமையில் கோழைகளை விழைந்திடாதே

வாழ்த்துவதும் தாழ்த்துவதும் தோழமையே
பழக்கமிலா வழக்கமாமோ தோழமையே

வாழ்கையிலே ஏழைகளை தோழமையே
வாழைஇலை கோழைகளாய் எண்ணிடாதே

வழக்கம் என்பது தொடர் பழக்கம்
பழக்கம் என்பது பயிற்யின் தொடக்கம்

வழிமேல் விழிவைத்து முகம் சுழியாமல்
விழிகாத்து வழிபார்த்து மனதின் செழிப்பால்
மொழிபேசும் விழியாள் தழைத்தோங்கினாள்

வீழ்த்திய விழிகளுக்கு ஒரு விழா விழைந்தேன்.

வாழ்த்தியே வழிவிட்டு குழைந்தது குழந்தை

பிழைஎனில் விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்

கழனியில் வழியும் கழிவுநீர் ஒழித்திடு

சுழியில் மாண்டு அழுதிடும் மீ்ன்கள்

புழுதியில் வழுவும் புழுக்கள் யாவும்
பழுதுசெய் கழுகின் கொழுமொழு பழங்கள்

புழுக்கம் என்பது வெயிலால் வருமே

புழக்கம் ஒருவகை சுழலும் செயலே


குழி பார்த்து கழிநாட்டி சுழிபோட்டான் உழவன் அதில்
பழிபோட்டு கழிசேர்த்தான் வழிப்போக்கன் கிழவன்

சூழ்ச்சியாலே வீழ்ச்சியைத்தான் வென்றிடவே முடியுமா?
வீழ்ச்சியாலே சூழ்ச்சியைத்தான் புரிந்து கொள்ள முடியுமா?

மகிழ்ச்சியாலே இகழ்ச்சியைத்தான் கொன்று போட முடியுமா?
இகழ்ச்சி வந்தால் மகிழ்ச்சியைத்தான் புரிந்து கொள்ள முடியுமா?

புகழ்ச்சியாலே மயங்கிடாத நெகிழ்ச்சியான உதயமா?
நெகிழ்ச்சியாலே உருகிப்போகும் புகழ்ச்சி கொள்ளும் இதயமா?

வாழ்க்கையிலே காழ்ப்புணர்ச்சி சாதனைதான் தந்திடுமா?
சீழ்பிடிக்க்கும் காழ்ப்புணர்ச்சி வேதனைதான் தெரியுமா?

ஊழ்வினைதான் வாழ்வினிலே பாழ்நினைவு தெரியுமா?
அது
ஆழ்மனதின் பாழ்கிணற்றின் கீழ்கனவு புரியுமா?

சோழிகளை வீசுகின்ற தோழிகளே பாருங்கள்
கோழிகளும் தாய்மொழிகள் பேசுவதை கேளுங்கள்

பேழை ஒன்று சோழ நாட்டில் வாழ வழி செய்தது
வாழை மரம் காழியூரில் தாழை போல நின்றது

தாழம்பூவும் வாழைப்பூவும் தோழமைதான் கொண்டது
வேழம் ஒன்று சோழ நாட்டில் கேழ்வரகு தின்றது

முழம் அது முன்கை தொடங்கி முழழங்கை வரை உள்ளது

முழங்கால், முழங்கை என முழங்கும் கிழங்கு வைத்தியர்
கிழவர்களுக்கு வழங்குகிறார் வழக்கமான ஒழுக்க அறிவுரை

முழக்கமிடும் வழக்கம் உள்ள அழுத்தமான அரசியல்
ஒழுக்கம் எனும் பழக்கம் இல்லை இழக்கையில் தன் ரகசியம்
மழித்து வாழும் பழிகள் தாங்கி கொழுத்து நிற்கும் கடைசியில்
செழித்த மனம் மழுங்கடிக்கும் வழுக்கும் இந்த அரசியல்

கூழ்குடிக்கும் உழவன்தானே குழப்பம் இன்றி வாழ்கின்றான்
ஈழ நாட்டு போராளி பாழ் கிணற்றில் போகின்றான்.

யாழ்ப்பாணம் போய்வந்து கூழ்ப்பானை தூக்கு

தாழ்போட்டு யாழ் மீட்டி காழ்ப்புணர்வை விரட்டு

கழிந்து நின்ற நாட்களை எழுந்து நின்று பாருங்கள்
அழிந்து போன எழுத்துக்களை சூழ்ந்து கொண்டு தேடுங்கள்

தமிழின் சிறப்பு ழ வை
தொடர் பயிற்சியால்
முயன்று பழகலாம்.

பழகிய பிறகு வரும் திருப்தியில்
திளைப்பதில் நமக்கு வருவது
தமிழில் பெருமை,
தமிழால் பெருமை அன்றோ?

இந்த உச்சரிப்பு உலகில் வேறு எந்த மொழியில் கிடையாது என்பது ஆராய்ந்து கண்ட உண்மை.

இதன் சிறப்புகள்:

இரு மெய் சேர்ந்து வரவே வராது. (ஆழ்ழ், சீழ்ழ், வாழ்ழ்) , அதாவது இதன் மெய் யில் அழுத்தம் கொடுக்க முடியாது.

இதன் மெய் ( ழ் ), ற, க தவிர்த்து (பிறழ், நிகழ், அகழ், மகிழ்,) எந்த குறில் உடனும் நேரடி சேர்க்கை கொள்ளாது (அழ், இழ், உழ், எழ், ஒழ், சழ், பழ், மழ், தழ், நழ், வழ் ) உயிர் நெடிலுடன் நேரடி சேர்க்கை கொள்ளும். (ஆழ், ஊழ், ஏழ், காழ், தாழ், பாழ், கூழ், சூழ், வாழ்,)
இதன் மெய்யை க், ச், ந், த் இவை மட்டுமே மெய்யாக ஒட்டி தொடரும். (வாழ்க்கை, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, மகிழ்ந்து. நிகழ்த்து, வாழ்த்து, புகழ்ந்து,)

இது போன்ற சில சங்கதிகள் இன்னும் ஆராய்ச்சியில் உள்ளன.

இனி மேலே பார்ப்போமா?

தொடரும்.........



(யோசனைகளும் குறை சுட்டலும் ஆக்கபூரவ முன்னேற்றத்திற்கு வழி செய்யும் வகையில் விருப்புடன் வேண்டப்படுகின்றன. விவாத மேடை ஆக்கும் நோக்கம் தவிர்க்கப்படலாம்.)



(ஏதோ தெரிஞ்சதை எழுதறேனுங்க.... யாரும் தோல் உரிச்சுப்புடாதீக.....)

எழுதியவர் : மங்காத்தா (21-Mar-13, 6:56 am)
பார்வை : 438

மேலே