தளத்தின் படைப்புகள்

தளம்வாழ் உயிரினும் மேலான சகாக்களே
சில பல படைப்புகளை படித்து பார்த்தேன்.
காளியப்பன் எசேக்கியல், பழனிகுமார்,
இவர்கள் போன்ற இயல்பு கவிஞர்கள் ஏன் தளத்தில்
காண முடியவில்லை.
படைப்புகள் பெரும்பாலும் முக்கலும் முனகலும் கூடி, கைதட்டலுக்கும், புள்ளிகளுக்கும் ஆர்வம் கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே வருவதாக உள்ளனவே.
ஜோதிடக்காரனின் கிளி போல, (அது ஒரு அரிசி / நெல் தானியத்திற்காகவே சீட்டு எடுப்பது போல) ஒவ்வொரு படைப்பும் கொடுத்த பின்பு கருத்துகளை எதிர்பார்த்து, ஊக்கம் அடைய பலூனுக்கு காத்து அடிக்கவேண்டிய அவசரத்தை உணர்வதை போல ஏன் உள்ளது இந்த தளத்தில் பலரின் படைப்புகளும், அதற்கு கருத்து சொல்லும் போக்கும்.
கருத்து எனும் பேரில் கூப்பாடு போடும் கூட்டம் ஒழிந்தால்தான் இதற்கு தீர்வு என்று நினைக்கிறேன்.
தமிழில் எதை கிறுக்கினாலும் அது படைப்பாகி விடும் என்ற ஒரு மயக்கத்திலோ, நானும் எழுதுவேன், எழுதிப் பழகுவேன், கருத்து வந்து குவிந்தால் பக்குவப்படுவேன் என்ற நோக்கத்திலோ படைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
தளத்தை இலக்கிய மேடையாக்கிட அனைவரும் உதவுங்களேன்.
இலக்கியம் என்பது கவலைகள் மறக்க, தமிழை வளர்க்க, சிந்தனையை சீர்படுத்த, ஒரு நோக்கம் கொள்ள வைக்க இருக்கும் ஒரு தனி உலகம். அதை ஏன் சின்னாபின்னா படுத்தி சீரழிக்க விட வேண்டும்.
கருத்து பரிமாற்றங்களை தனிவிடுகையில் நீண்ட நெடுங்கதையாக எடுத்துச் செல்லுங்களேன்.
பெரும்பாலும் தமிழர்கள் பரவலாக கோயிலுக்கு செல்லும் பழக்கம் உள்ளவர்கள்தானே. அங்கே கோயிலில் ஆரவாரம் செய்வதை யாரும் விரும்புவதில்லைதானே.
பிறகு இங்கு தளத்தில் மட்டும் ஏன் கூப்பாடு எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன?
அமைதியான முறையில் இலக்கியம் வளர்க்கலாமே.
இலவசமாக கிடைத்திருக்கும் தளத்தின் வசதிகளை பதமாக பயன்படுத்தி, பண்பாக உறவை வளர்க்கலாமே.
படைப்பை படிக்கும்போதும், கருத்து பதிவு செய்யும்போதும் சிந்தனையில் அமைதி பிறக்கட்டுமே. நடைமுறை வெளிப்பாடுகள் பண்பட்டவையாக இருக்கட்டுமே. பரிமாற்றங்கள் படைப்பு தொடர்பானதாக மட்டுமே சுருக்கமாக இருக்கட்டுமே. விரிவாக பகிர தனிவிடுகை இருக்கவே இருக்கிறதே.
குடும்ப நடத்த வீடு என்றும், அதில் அறைகள் என்றும் உண்டுதானே. பிறகு ஏன் வீதியில் வந்து குடும்பக் கதை பேச வேண்டும்.
அதே போல, படைப்பு சம்பந்தப் பட்ட விஷயங்களை மட்டுமே சுருக்கமாக, அமைதியாக, ஒரு சில வரிகளில் கருத்து எனும் பெயரில் பகிரலாமே. மற்றவை தனி நபர் தொடர்பில்தானே நலம் பயக்கும்.