வெறுமை

தொலை தூரத்து
பூமி வளையத்தில்
தொடும் வானம்
மேகத்திரையை
விரித்துப் போடும்

காற்றிழுக்கும் திசையில்
மஞ்சள் கலந்து
கருப்புப் புகைச்சலுடன்
ஈரத்தையும் வீரத்தையும்
சேர்த்த மேகத்திரை
அலையும் கலையும்

கண்ணாமூச்சி காட்டிய
மின்னல்
கண்ணாடியைக் கண்ணில்
குத்தியதுபோல் தெறிக்க
நிலம் நடுங்கும்
இடி முழக்கம்
மண்ணில் மழையை
இறக்குவதை உணர்த்தும்

தொடுவானப் போராட்டம்
நடுவானைத் தொடும்போது
நடுங்கிப் போவேன்

கூட்டம் இழந்து
குற்றுயிரான
ஒற்றைக் குழிமுயல்
நான் பதுங்க
புதர் ஏது
வீட்டு மனைக்காக
பூதாகர இயந்திரம்
சுத்தம் செய்த காட்டில் !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (25-Mar-13, 9:41 pm)
பார்வை : 107

மேலே