பூமியும் பெண்ணும்

காட்டின் கதவுகளூடே
கசிந்துநின்ற ஒலிச்சிதரல்களில்
தன்னிசை மொழியினை
உரத்திக் கூறியது குயில்.

அங்கொரு மானின் அலறல்,
மறுபடியும் ஒரு உறுமல்,
மறுகோடியில் கூட்டக் குரைப்பு,
குலையையறுக்கும் ஓயா உரவி.

பசுமையின் அடர்த்தி,
குளிர்ச்சியின் உச்சத்தில்
ஒய்யாரமாய் ஒரு கூடாரம்,
மஞ்சத்தின் இனிமையில் காதலி.

பூமியுடலில் ஊன்றிய வேர்,
ஓங்கிவளர்ந்து மரமாய் உயிர்த்து,
பூத்துக்குலுங்கி, விதையெனும்
உயிர்க்குழந்தை மறைத்துத்தரும் கனி.

வேர்கொண்ட பூமியிங்கே
உயிர் வளர்க்குது மரத்துக்குள்.

பூதவுடல் புகுந்த வேர்,
ஊற்றி மறைந்த உயிரை
பேணிக்காத்து கற்பமுடன்
கண்காட்டுது கனிந்த பெண்மை.

உயிர்கொண்ட பூமியிங்கே
மழலை வளர்க்குது தனக்குள்ளே.

எழுதியவர் : தீ (9-Apr-13, 9:11 am)
பார்வை : 122

மேலே