மன்னிக்கவும் புகைப் படத்திற்குச் சொந்தக்காரப் பெண்கள் ....
இதுவரை எனக்குச் சாபம்
கொடுத்தோரின் எண்ணிக்கை
ஏறக்குறைய 27ஆக இருக்கலாம் !
அவர்கள் யாவரும் சிறந்தவர்கள்
அறிவிலும் அழகிலும்
என்னை விட ...
என்னவள் என்னை
நிராகரித்ததின் விரக்தியால்
தள்ளப் பட்டுள்ளேன் நான்
மேற்சொன்னவர்களை
நிராகரித்திடும் நிர்பந்தத்திற்கு ...
கொதித்துத்தான் போவார்கள்
அவர்கள் என்னை நேரில் கண்டால்
இவனெல்லாம் எங்களை நிராகரிப்பதா என்று !
நாளை எனக்குச் சாபம்
கொடுப்போரின் எண்ணிக்கை
உயரப் போகிறது மீண்டும் !
இன்னும் சில பெண்களின்
புகைப்படங்களோடு நாளை
வர இருக்கிறாராம் திருமண தரகர் !
எனக்குக் கேட்க வேண்டும்
என்பதற்காக உரக்கச் சொன்னாள்
அம்மா !
உயிர்போகக் கத்தினாலும்
காதே கேட்காத பக்கத்து வீட்டுக்
கிழவியிடம் !