மதம் ஒழிப்போம்-03-கே.எஸ்.கலை
அறிவைத் தின்ற அன்போடு
•══•ஆத்திரத்தில் நெஞ்சை நிமிர்த்தி
ஆணவத்தால் கத்தி திரியும்
•══•அந்த நாள் தோழர்களே...
ஆத்திரத்தை அடக்கிவிட்டு
•══•அறிவு கொண்டு சிந்தியுங்கள் !
பிரிவினைகள் தின்று தீர்த்த
•══•ரத்தக் கறைப் படிந்த நாட்டில்
சத்தமிட்டு அழைகின்றேன்
•══•சாதி பேதம் அழிக்க தானே ?
மோதி என்னை தாக்க எண்ணி
•══•கத்துவது மொத்த வீணே !
வக்காலத்து வாங்கி நின்று
•══•வாய் கிழிய சத்தமிட்டால்
எக்காலத்திலும் வெற்றியில்லை
•══•என்று நீங்கள் உணர வேண்டும்
முக்காலத்திலும் வசந்தம் வர
•══•புத்தி தானே தெளிய வேண்டும் !
மதம் என்ன செய்குதென்று
•══•எழுத்து தளத்தில் தேடவேண்டாம்
எழுந்து கொஞ்சம் வெளியில் வந்து
•══•உலகை நீங்கள் பார்க்க வேண்டும்
எரிந்து சிதையும் மனித குலம்
•══•என்ன பாவம் செய்ததிங்கு ?
நுனிப் புல்லாய் மேய்ந்துவிட்டு
•══•துஷ்டனென்று என்னைச் சாடி
துணிந்து நீங்கள் கோஷமிட்டு
•══•துப்புரவாய் நெறிப் பிறழ்ந்து
அணிந்து கொண்ட வன்மம் இங்கு
•══•அழிய வேண்டும் சீக்கிரமே !
உங்கள் மதம் உங்கள் இனம்
•══•நன்மை பல கொண்டதென்று
இவன்-அறியாத மூடனல்ல !
•══•நன்றாக இருந்த குளம்
நஞ்சாகிப் போன பின்னே
•══•அருந்தி நாங்கள் சாகலாமோ ?
சுத்தம் செய்ய முடியாத
•══•ஆழம் வரை விடம் சென்று
வேரறுக்கும் நோய் பரப்பி
•══•வேதனைகள் நிதம் தருதே
கடல் போல அன்பிருக்க
•══•குளம் போன்ற மதம் எதற்கு ?
உடல் எரித்து உணர்வழித்து
•══•உறவெல்லாம் கெடுத்துவிட்டு
உலவி வரும் இந்த மதம்
•══•உருப்படியாய் செய்ததென்ன
நிலவி வரும் பிரிவினைக்கு
•══•முதற்படியே மதம் தானே ?
கடவுள் என்ற கருவி ஒன்று
•══•வெளியில் இல்லை நம்புங்கள்
தூய்மையான மனதுக்குள்
•══•அவனைத் தேடி விரையுங்கள்
பிரிவினைகள் வளர்க்கும் இந்த
•══•மதம் வேண்டாம் வாருங்கள் !
படித்துவிட்டால் எவரும் இங்கே
•══•ஆகிடலாம் விஞ்ஞானி
பகுத்தறிந்தால் மட்டும் தானே
•══•பிரசவிப்பான் மெய்ஞானி
பகுத்து பிரித்து சிதைப்பதற்கு
•══•எதற்கிங்கே அஞ்ஞானி ?
ஆணவத்தால் எழுதவில்லை
•══•அக்கறையில் எழுதுகிறேன்
அஸ்திவாரம் ஆட்டுவிக்கும்
•══•மதம் இங்கு வதம் செய்வோம்
அன்பு மட்டும் மதம் என்று
•══•அறிவோடு நம்பி வாழ்வோம் !