மாடலிங்
அமுதா நிர்வாணமாக ஒரு ஸ்டூலில் அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றி கலைக் கல்லூரி மாணவரகள் உட்கார்ந்து, அவர்கள் பார்வையில் பட்ட கோணத்தில், அவளைப் படமாக வரைந்தனர்.
அரை மணி நேரத்தில் வேலை முடிந்தது. அமுதா சேலை அணிந்துகொண்டு புறப்படத் தயார் ஆனாள்.
கல்லூரி முதல்வர் அவளிடம் ஐநூறு ரூபாய் தந்தார். "உன்னுடைய வேலைக்கு இந்த பணம் மிக மிகக் குறைவான தொகைதாம்மா. ஆனா அதிகமா தர்றதுக்கு கல்லூரியில் வசதி இல்லை" எனறார் புன்னகையுடன்.
ஒரு சில மாணவர்கள் அன்பளிப்பாக அவளிடம் பத்து, இருபது என்று பணம் தந்தார்கள்.
கிடைத்த பணத்துடன் அமுதா வீடு வந்து சேர்ந்தாள். வரும் வழியிலேயே அம்மாவுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கி வந்தாள். மணி இரண்டு. இனி சமைக்க நேரமில்லை என்பதால், ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக் கொண்டாள்.
"ஏம்மா இவ்வளவு நேரம்?" அம்மா கேட்டாள்.
"வேலை முடிய நேரமாயிடுச்சிம்மா." அவள் என்ன வேலை செய்கிறாள் என்று அம்மாவுக்குத் தெரியாது.