நான் இன்றைய மங்கன் (மங்கைக்கு ஆண்பால் - நவீன கண்டுபிடிப்பு)

முந்திய இரவின்
தொடர்ச்சியாக

கைப்பேசி உலாவியின்
இணையத் தொடர்
அணைப்பால்
தூக்கம் துரத்தும் கண்களோடு
காலையில்
தாமதமாக விழித்தாயிற்று

மணிபார்த்து அலறி
வைத்த அலறி (அலாரம்)
வேலை செய்யாததை
எண்ணி
நொந்து சலித்து,

அவசரமாய்
துண்டை தோளில் இட்டு
குளியலறைக் கதவை
அடித்து சாத்தி
உடைத்தாயிற்று

காலைக் கடன்களை
ஒருசேர முடிக்க
வசதியாய்
வாயில் தூரிகை கொண்டு
சிம்மாசனத்தில் அமர்ந்து
அனைத்து செயல்களையும்
குளியலறையில் முடிக்க
பாடுபட்டு,
பாடகனாகவும்
உருவெடுத்தாயிற்று


முகச்சவரம் செய்துகொள்ளும்
அவசரத்தில்,

இத்தனை பரபரப்பில்
நவீன மங்கைகள் அனைவரும்
எப்படித்தான்

சுற்று சூழலையும் சமாளித்து
தன்னையும் கவனித்துகொண்டு
பொறுமை இழப்பின்றி
பெண்மை குணத்தையும்
நிர்வகித்து
அலங்காரத்துடன்
பவனி வருகிறார்களோ
என்று மலைத்து,

அதனூடே
முகத்தில்
தகட்டு இழுவைகள்
செய்த சிகப்பு வரிகளையும்
பெற்று எரிச்சல் கொண்டு
நவீன ஆண்தோற்றம்
பெற்றாயிற்று

பாத உறைகளும்
உறைகாலனிகளும்
அணிந்து கொண்டே
காலைச் சிற்றுண்டி
துரித உணவை
முடித்தாயிற்று

அடுக்கு மாடி குடியிருப்பில்
அவசர கதியில் இறங்குவதாக
காட்சியளித்து
ஒயிலாக இறங்கியதால்
காலில் சுளுக்கு வந்து
அதை மறைத்து

எழிலாக நடந்து
இரு சக்கர வாகனத்தில்
தாவி ஏறி
தோரணையால்
தன்
இயலாமையை மறைத்தாயிற்று

வாகனத்தின் மீது அமர்ந்து
கழுத்து தொங்கு பட்டியை
அக்கறையாக அணிந்து

வாகன கண்ணாடியில்
அழகு பார்த்து
ஆண்மையை உறுதிசெய்து
திருப்தி கொண்டாயிற்று

அலுவலம் சென்று
துறைத் தலைவரிடம்
வசை வாங்கி
பிறரிடம் இசைவாய்
புன்னகைத்து
தன் மானம் காத்தாயிற்று

இத்தனை பரபரப்பின் நடுவே
சம்பள வரவு செலவு கணக்கை
மனதினுள்ளே போட்டு வாங்கி
புழுங்கி
"வாகனத் தவணைக்கு பணம்?"
எனும் கேள்வியை
மனதில் எழுப்பி
அலட்சியமாய் நாக்கை
சுழற்றி
வீராப்பு கொண்டாயிற்று

எதிர் வீட்டு அழகியின்
நமுட்டு ஏளனச் சிரிப்புக்கு
அன்றாடம் ஆளாகியும்
கைப்பேசியில் அவளின்
அழைப்பை எதிர்பார்த்து
தவறாமல் காத்திருக்கும்
நான் இன்றைய "மங்கன்"


(ஒரு நெற்றிப்பொட்டு நிறுவனத்தின்
"நான் இன்றைய மங்கை" எனும்
ஒயிலான ஊடக விளம்பரத்தால்
தூண்டப்பட்ட வரிகள் மேலே இருப்பவை)
சூழலுக்காக கண்டுபிடிக்கப்பட்ட நவீனம்
மங்கைக்கு ஆண்பால் சொல் - மங்கன்
தவறான சொல்- எவரும் பின்பற்ற வேண்டாம்)

எழுதியவர் : மங்காத்தா (10-May-13, 3:22 am)
பார்வை : 205

மேலே