என் கிரிஷ்-க்கு கடிதம்..

என் குட்டித் தம்பி கிரிஷ்..,
உன் இளைய அண்ணன் ராம் எழுதும் உயிர் கடிதமிது ...

கடிதத்தை வாசித்துப் புரிந்து கொள்ள உனக்கு தமிழ் எனும் மொழி அறியாமல் இருக்கலாம்,
எனில் அன்பென்ற பர பிரம்ம மொழி நீ அறிவாய் என்ற நம்பிக்கையில் இதோ இவ்வார்த்தைகள்....

'நீ' என்ற உன் அன்பின் ஆழுமை என்னில் எவ்வளவு புதைந்துள்ளது என்பதை இது வரை நான் விவரித்ததில்லை..
இன்று விவரிக்காமல் இருக்க இயலவில்லை...

சமூகம் சொல்லும் 'கடவுள்' என்ற நம்பிக்கை எனக்கு இல்லை , நான் கடவுள் எனக் கருதும் வகையிலும் அவைகள் இருந்ததில்லை...
எனிலும் 'கிருஷ்ணா' எனும் கதாபாத்திரம் எனை கவர்ந்திழுக்கவே அவன் நினைவாய் உனக்கு 'கிரிஷ்' என பெயர் சூட்டினேன்..
ராமன் அவதாரத்திற்கு பிறகு பிறந்த கிருஷ்ணா போல், என் வீட்டில் 'ராம்' என்ற அண்ணனுக்கு 'கிரிஷ்' என்ற தம்பியாய் இணைந்தாய்...

பிறந்த எட்டே நாட்களில்
சுருங்கிய குட்டிக் கண்களோடு
மடங்கிய மெல்லிய காது மடல்களோடு
குறுகிய குட்டி வாலோடு
மிருதுவென மென்மை ரோமங்களோடு
பாலென்றால் பசியோடு
வேல் மட்டுமில்லா காவலனாய்
எங்கள் வீட்டு கைகளில் வந்துச் சேர்ந்தாய்...

கொஞ்சினேன் கொண்டாடினேன்
ஆர்ப்பரித்தேன் உன் அழகால்,
அன்பு கொண்டேன் உன் கள்ளமில்லா கண் பார்வையினால்,
ஆசை பிறந்தது உன்னை திட ஆண் மகனாய் வளர்த்திட
ஓசை புரிந்தது அது உன் மொழி என்பதினால்...

நீயும் சிரிக்க நானும் சிரிக்க
நாம் என்ற ஒலி பிறந்தது
அதன் எதிரொலி அடங்கும் முன்னே
உன் உயிரொலி முடுக்கி விட்டாய்..
என்னடா ஞாயமிது..??
ஏன் இந்த முடிவு..??
எதற்கிந்த இரு மாத கனவு..??

இனி நான் கிரிஷ் என்று அழைத்தால்
நடை தெரியா பிள்ளைப் போல தடுமாறி
அம்முற்றத்தின் இரு படியில் உருண்டோடி
துள்ளிக் குதித்து தடைகளைத் தள்ளி மிதித்து
உன் முன்னங்கால்களின் முல்லைப் பூ பாதத்தால்
என் மானிடக் கட்டை கால்களைத் தொட்டுக் கட்டி
வாழைத் தோலாய் ஈரமுற்ற நாவினால்
என் எண்ணில்லடங்கா சரும ரோமங்களை
ஈர படுத்த போவது எப்போது..??

அமைதியாய் உன் அருகே அமர்ந்து
கைகள் நீட்டி விரல்கள் மடித்து
'வா டா கிரிஷ்' என்று அழைக்கும் பொழுது
கைகளின் மொழி அறியாமல்
வெகுளியாய் இடப்புறமும் வலப்புறமும்
சாய்த்துச் சாய்த்துப் பார்க்கும் உன் செல்லப் பார்வைகள் எங்கே..??

உன்னை தனித்திருக்கவிட்டு வெளியே நான் சென்று திரும்பினால்
எனை காணும் கணத்தில் ஓடி வந்து என் கால்களை சுத்தி
கண் இமைக்கும் நொடியில் என் மீது பாய்ந்து
'எப்படி நீ என்ன விட்டு போவ?' என்ற உரிமையாய்
என் மாரில் நீ பதித்த அக்குண்டூசி கால் நகங்களின் தடயங்கள் எங்கே..??

Cerelac தவிர ஏதேனும் உண்பதற்கு வைத்துவிட்டால்
தயவு தாட்சைக் கூட பார்க்காமல்
தயக்கமே இல்லாமல் உன் தட்டினை மிதித்து தள்ளும் உன் கொஞ்சல் கோபங்கள் எங்கே ..??

உண்பதில் உறங்குவதில்
குளிப்பதில் குதிப்பதில்
கோபத்தில் கொஞ்சலில்
சேட்டையில் செய்தி சொல்வதில்
செல்ல கள்வனாய் கள்ளர் பிடிக்கும் காவலனாய்
இருந்த இரு மாதம் முழுவதும் நீ
அக்கிருஷ்ணனாய் தான் வாழ்ந்திருக்கிறாய்..!!

எங்கள் முதல் சொந்த வீட்டில்
மூன்றாம் மகனாய் இணைந்து
நம் முன்னேற்றம் கண்டு
முப்பொழுதும் நம்மைக் கரித்து உரைத்திடும்
அச்சிறுபான்மை சொந்தகளின் மொத்த சாபத்தையும்
நீயே சுமந்து விட்டுச் சென்று விட்டாயாடா...

மூன்று வருடமாய்
குடும்பமே கனவாய்க் கண்டிருந்த
என் மேற்படிப்பினை
உன் இறப்பின் அதே நாளில் நிகழ்த்தி விட்டு
வந்த வேலை முடிந்தது என்பதாய்
இன்று என் மரியாதைக்குரிய உயர்ந்த உயிராய் சென்று விட்டாயடா...

இறக்கும் தருவாயில் கூட
உன் ரத்த வாந்திகளை வீட்டில் எங்கும் கொட்டாமல்
நடக்க இயலா தருணத்தில் கூட
உனக்கென்ன விரித்த பாயில் சென்று கொட்டி
சுய ஒழுக்கம் கற்றுக்கொடுத்துச் சென்றாயடா..

வந்தது கிரிஷா அல்ல நான் கடவுள் எனும் கருதும் பர பிரம்மமா ??
புரியாமல் திணறி நிற்கிறேன்...
நான் வெறும் ஆறே புலன்கள் கொண்ட அற்ப மானிடன்,
புலனிலடங்கா ஓர் தெய்வீக உருவமோ நீ என்பது கூட என் சந்தேகம் தான்..

நல்ல பிறப்பென்பது அதன் இறப்பில் தான் வெளிப்படும்..
இரு விஷயங்களில் அது தீர்மானிக்கப்படும்,
1. எத்தனை மனிதர்களை ஒருவன் சம்பாதிக்கிறான் என்பதை விட எவ்வளவு மனிதம் அவன் சம்பாதிக்கிறான் என்பது
2. அவன் இறந்த பின்பும் வாழ்வாரிடத்து வாழ்வது

இன்று உனக்காக
பக்கத்து வீடு எதிர்த்த வீடு
உன்னோடு விளையாடிய சிறுவர்கள்
நீ விளையாடிய நம் வீட்டு வேலைக்காரர்கள் வரை
சுமார் 30 பேராவது கண்ணீர் வடித்திருப்பார்கள்..
மனித அன்பின் உண்மை கண்ணீர் அவை..

இன்றும் உன்னை கட்டிப்போட்ட கயிறின் முனையில் நீ இல்லை என்பதை என்னால் உணர முடியவில்லை,
இறந்தும் வாழ்ந்து தான் இருக்கிறாய்..!!
இது போதுமடா நீ தெய்வப்பிறவி என்பதற்கு..!!

"வெறும் நாய்க்காக இத்தனை அலறல்களா ?? l" என எண்ணும் அற்ப மானிடரை விட்டுத்தள்,
ஏனெனில் அவர்கள் நாம் ரகசியமாய் மட்டும் பேசும் அன்பெனும் மொழி அறியாதவர்கள்..!
குறைந்த நாட்களே உன்னுடன் இருந்தேன் என எண்ணி நான் வருத்தப்படபோவதில்லை,
இரு மாதம் அக்கடவுளோடு விளையாடி இருக்கிறேன் என அதிசய படுகிறேன் ...
ஆசிர்வதிக்க படுகிறேன்..!
எனில் 'வால்' நட்சத்திரம் ஒரு சில மணி நேரம் தான் வந்து போகுமென்ற உண்மை அறிவேன் நான்..!!

இக்கடிதம் என் மொழி திறன் வெளிப்பாட்டுக்காக அல்ல,
இவ்வுலகம் உன் புனித பிறப்பினை அறியட்டும்
இரு மாதத்தில் நீ உணர்த்திய அன்பெனும் ஆயுதத்தை எடுக்கட்டும்..
அதற்கு என் தாய் மொழி செய்யும் ஒரு சிறிய சமர்ப்பணம்.. !!

-ராம்

எழுதியவர் : ராம் K V (10-May-13, 6:24 pm)
சேர்த்தது : Ram
பார்வை : 86

மேலே