சுமைதாங்கியிடம் ......

என்னை நான்
வியந்து பார்க்கிறேன்
நெஞ்சு வெடிக்கும்
மனச் சுமைகளைக் கூட
தாங்கிக்கொள்ளும்
மனோபாவத்தை
இறைவன் எப்படி
கொடுத்தானென்று !

எப்படியும் ஏதோ
ஒரு விதத்தில்
ஒவ்வொருவருக்கும்
மனச் சுமைகள்
இருந்து கொண்டுதான்
இருக்கிறது!

சுமைகளை ஏற்றிய
பார வண்டியாய்
இமைகளை மூடி
ஒரு புத்தனைப்போல்
சும்மா இருத்தலின்
சுகம் காணும்
முயற்சியில்
தோல்விகளே
நிதர்சனம்!

நடைபயணத்தில்
தலைமுதல்
பாதம்வரை
நரம்புகள் உயிர்த்தெழ
பாரம் பதவி விலகி
பயணிக்க ஆரம்பித்தது !

கிராமத்து
ஒற்றையடிப் பாதையில்
கம்பீரமாய் நின்ற
சுமைதாங்கியில்
சாய்ந்தபடி
ஓய்வெடுத்தேன்......

" தலைச் சுமைகளை மட்டுமே
இறக்கிவைக்கின்றனர் "
என ஏக்கத்துடன்
முணுமுணுத்த
சுமைதாங்கியிடம்
விக்கித்து
வலுவிழந்துபோனேன் !


..............கா.ந.கல்யாணசுந்தரம்.

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (11-May-13, 7:13 am)
பார்வை : 96

மேலே