ஆரிரரோ...

எத்தனையோ
தீய பட்டங்கள்
சுமந்தனள்,
அனைத்தும் பொறுத்தாள்
எதற்காக!
நீ கொடுக்கும்
அம்மா பட்டத்திற்காகத்தானே!
அம்மா
கருவறையில்
நீ ஊட்டியது உணர்வுப்பால்
இந்த பால்விழியில்
நீ ஊட்டியது உனது பால்
நீ கொடுத்தப் பால் வைத்துதானே
அறிவு,உடல்,அன்பு,பாசம்
அனைத்தும் வளர்த்தேன்.
எத்தனை நாளான
கனவு உனக்கு என்னைப் பெற்றெடுக்க,
அனைத்து கனவுகளையும்
நான் நிவர்த்தி செய்துவிட்டேனாமா!
நான்
பெறாமல் பெற்ற கடனல்ல
கடமை.
உன்வயிறை தொட்டு தொட்டு
என் வளர்ச்சியைக்
கண்டுபிடித்தாயோ!
தொப்புள் கொடி
அதுதானம்மா என்
உயிர் கொடி
உன் வயிற்றுக்குள்
முறையாக நான் வளர்ந்தாலும்
முரணாகத்தானே வளர்ந்தேன்.
எவ்வளவுதான் கருத்து வேறுபாடு இருப்பினும்
நீ எனக்குத்தாய்
நான் உனக்கு சேய் தானம்மா!
எத்தனையோ
குழந்தைகளைக் காணும்போதெல்லாம்
நீ நினைத்திருக்கலாம்
என்னை....
இதோ இப்போது நான் உன் மடியில்.
எந்த வலியாக இருப்பினும்
நான் உனைத்தானே
முதலில் அழைப்பேன்
அம்மா
நீ இல்லாதுபோயின்
உன் புடவையாவது கொடுத்துவிட்டு போ
அந்த வாசனையே
என்னை வழிகோணாது
அக்கறையோடு பாதுகாக்கும்.
எத்தனையோ சமையல் நீ செய்திருப்பினும்
அதன் உருவாக்கத்தை அனைவரிடமும் பகிர்வாய்,
எனை உருவாக்க நீ செய்த சமயலை
என் அப்பாவிடம் மட்டும்தானே பகிர்வாய்.
எவ்வளவோ வலிகளை நான் கொடுத்திருக்கலாம்,
அதை ஒருமுறைகூட நீ பழிதீர்த்ததில்லையே!
நீ நியுட்டனின் மூன்றாம் விதியைப்
பொய்யாக்கியவள்.
நீ அடிப்பது கூட
எனை நல்வழிப்படுத்தத்தானே,
அதுவும் ஆபத்தில்லா இடம் பார்த்துதானே
அடிப்பாய்.
அடி வேகமாக விழுந்து
அம்மா என எனது அலறலில்
நீ உடனே வந்து கட்டி அணைப்பாய்.
நான் பார்க்கக்கூடாதது
உன் கண்ணீர்
ஆனந்த கண்ணீர் கூட
என் முன்னால் வேண்டாமம்மா!
வயிற்றினுள் குழந்தையாய்
எனை சுமந்தாய்.
வயிற்றின் வெளியே அம்பாரியாய்
எனை சுமக்கிறாய்.
ஆனால் நான் உனை சுமப்பதைக்கூட
நீ காண முடிய வில்லையே.!
நீ இறந்த பின்
எனக்கு அழுகை முதலில் வரவில்லை
நீ பாடிய தாலாட்டுக்கள்
அனைத்தும்தானே முதலில் வந்தது.