போதைச் சேற்றில் மனித நாற்றுக்கள்
கர்ப்பமென்ற நாற்று மேடையில் கடவுளினால் விதைக்கப்பட்ட மனித விதைகள்
ஐயிரண்டு மாத அன்புப் பராமரிப்பில் நன் நாற்றுக்களாய் பிறப்பெடுக்க
தாய்மையென்ற பாத்தி கட்டி பக்குவமாய் பல நாளாய்ப் பதியம் வைத்து
தந்தை என்ற நிழலிட்டு மனித மரங்களாய் மண்ணினிலே வேரூன்றும் போதினிலே.
முதன் முதலாய் சுவாசிக்கக் கிடைத்ததுவோ தந்தையவர் சிகரட்டு புகையதுவே.
சுவாசித்த புகையும் நுரையீரல் நரம்பிற்கு புதுவிதமாய் சுவையூட்ட
தெருவோரக் குறுக்குகளில் நாற்றுக்கள் ஒன்றாக ஒழிந்திருந்து வேரூன்ற
அபின் என்றும் கஞ்சா என்றும் பல தடைவ அளவோடு உரமிட்டு
கனிதரும் மரங்களாய் வானுயர வளமாய் வளர்வது போல் வெளிக்காட்டி
புற்றுநோயும் காசநோயும் காசு இன்றி கனியாகத் தந்திடுமே.
இற்றுப் போன ஈரலுடன்; தாகம் தீர்க்க கேட்கிறது சாராயத் தண்ணீர்
சாராய நீரினிலே ஆதாயம் தேடுவோரும் பாத்தி கட்டி பங்களிப்புச் செய்கின்றனர்
இந் நாற்றுக்கள் வாடுவதில்லை எப்போதும் தண்ணியின்றி தரணியிலே
வறுமையென்ற வெயிலினிலும் அடகுக்கடைகளும் குடிசைகட்டி நிழல்கொடுக்க
தாலிக் கொடியும் தங்கச் சங்கிலியும் கைமாறும் ரகசியமாய்.
நாற்றுக்களின் நரம்புகள் நடனம் ஆட மறுக்கின்ற வேளைதனில்
ஞானம் பிறக்கும் மெதுவாய் நாற்றின் நாற்றக் குடலும் நாறும் விரைவாய்
போதைச் சேற்றில் அழுகிய வேருடன் கழுத்து வரை புதைந்துபோன பின்னர்
சாவும் நெருங்கி வந்து கருகிய ஈரலுடன் காதலித்து கல்யாணம் செய்துவிட
இறந்துவிடும் இப் போதைச் சேற்றில் புதைந்துபோன புது நாற்று.