வேண்டும்! வேண்டும் !!
மண்வாசனையோடு
என் தனிமை தேடி வரும்
மழையை எப்பொழுதும்
வரவேற்றுக் கொண்டே
இருக்க வேண்டும்
நம்மைத் தவிர
வேறு எதுவும் நம் அருகில்
இல்லையென்று மூடி மறைக்கும்
பனிக்காலம் தொடர வேண்டும்
நடுக்கும் குளிரில்
ஒளியுடன் பவனி வரும்
முழு மதி
என்னுடன் கை கோர்த்து
நடை பயில வேண்டும்
கவிதைகளை
அள்ளி அள்ளி வழங்கும்
இரவுப் பொழுது
முடிந்து போகாது
இன்னும் நீடிக்க வேண்டும்
வெளி வாசலில்
எல்லோரும் படுத்து உறங்கும்
பயமற்ற காலம்
மீண்டும் திரும்ப வேண்டும்
வீட்டைப் பூட்டாமல்
பயணிக்கும்
தொலைந்து போன
கடந்த காலம்
நம் கதவு தட்ட வேண்டும்
ஏதேனும் ஒரு வேலை
போதுமான வருமானம்
வசிக்க ஒரு வீடு
படுத்தவுடன் தூங்கி
நிம்மதியாய்
காலையில் எழும்.,
பாக்கியம் என்று
பாட்டன் பூட்டன் வாழ்ந்த
வாழ்க்கையை
தேடிப் பெற வேண்டும்
எந்தக் கவலையுமின்றி
ஓடியாடி விளையாண்ட
பருவத்தை நோக்கி
நடைபோட வேண்டும்
உங்களில் ஒருவனாக
என்னை ஏற்றுக் கொண்ட
நீங்கள்
எனக்கு என்றும்
உயிராக இருக்க வேண்டும்
என் கற்பனை மேகம்
பொழியும்
கவிதை மழை
உங்கள் இதயத்தை
நனைத்துக் கொண்டே
இருக்க
தொடர வேண்டும்
மீண்டும் பிறந்தால்
இந்த புண்ணிய பூமியிலேயே
பிறக்கும் வரம் வேண்டும் !