வாழ்க்கை எனும் வழிப்போக்கு !

பாசமும் பாவமும் இரண்டும்கலந்தே
பால்வெளி வீதியில் கோள்களுமிட்டு
தேசமும் ஆழியும் தென்றலும்கொண்டு
திங்கள் வலம்வரப் பூமியும்செய்து
நாசமும் தீமையும் நாடுகள் கொள்ள
நாம்பெறும் மேனியை நீரொடு மண்ணும்
கேசமும் தோலுடன் கொட்டவும் இரத்தம்
கூடிஎலும்புடன் கொள்ளப் பிணைத்து

ஆசை பொறாமைகொள் அகமென ஆக்கி
ஆடித் துடித்திடும் அங்கமும்செய்து
பாசை ,வினோதங்கள், பயிலென ஆட்டம்
பேசி மகிழ்ந்தவர் பெண்ணுடன் ஆணை
கூசும் குரோதங்கள் கொள்ளிழி வாழ்வில்
கூடிக் குலாவென கோலமும் செய்து
பூசிமறைத்தொரு புன்மைகொள் மேனி
பூஇதுவேயெனக் காதிலும் சுற்றி

கூடி இணைந்தொரு குழந்தையும் பெற்று
கொண்டபெருஞ் சுக மென்று அழைத்து
மூடி விழித்திட மோகமும் பிள்ளை
மெல்லச் சிரித்திட மேனி சிலிர்த்து
தேடிப் பொருள்கொள்ள ஆவெனக் கத்தி
தென்றல் உடல்மணம் கொள்ள முகர்ந்து
ஓடிநடந்திடும் செய்கை வியந்து
ஒரடியில் விழ உள்ளங் கலங்கி

பாலைக் குடித்திடப் பரவசமாகி
பார்த்து அழும்நிலை பதை பதைத்தேது
சேலை படுக்கையில் சிற்றெறும் புண்டோ
செய்வினை செய்தெவர் விட்டமை தானோ
சூலை வயிற்றிடை செய் அழல்போலே
சொல்லவொணா வலி சேர்ந்திடலாமோ
மேலை இருந்தருள் செய்கண நாதா
மென்மை வலித்திட செய்வது நீயா

என்று துடித்தவள் அள்ளிஅணைத்தே
ஆற்றிடஎண்ணவும் அரும்பெனும் காலால்
முன்னே யுதைத்திட முகமதில் பட்டு
மெல்ல வலித்திட புன்னகை கொண்டும்
தன்னில் விடும்சிறு நீரில் குளித்து
தலையிடைகேசமும் பற்றியிழுத்து
கூன்என மேனிகிடந்திட முதுகில்
குதிரையு மோடிக் குலுங்கிச் சிரித்து

ஆயிரமாய் பல வேதனை கண்டும்
அம்மா எனும் வாய் மழலையில் மயங்கி
போயுளம் சூட்டினில் போட்டது வெல்லம்
போலும் இனித்திடும் பாகென உருகி
நேயம்விடுத்தவன் நம்மைப் படைத்தோன்
நீட்டியகையினில் தாயுயிர் கேட்டோன்
காயமழிந்திடக் கருவதன் உயிரை
கள்வனென் றேகவர் வேளையிற் கதற

மேனி கொடுத்திடு வானோ புலம்பி
மீளக் கிடைப்பதோ மெய்யெனும்பொய்யே
மாநிலம்விட்டொரு மாபெரும்வெளியில்
மங்குமொளிக் கரு மாயவிநோதச்
சூனிய வானிடை சோதியென் சக்தி
சூட்டினிலே பெரும் சூடெனும் தீயை
தானிணைந்தே நலம் காணில் விடுத்தே
தன்மை இயல்பெனப் பெண்ணே தேறாய்!

எழுதியவர் : கிரிகாசன் (1-Jun-13, 3:08 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 68

மேலே