பால்யத்தின் மொழி...
இத்தனை வயதிற்குப் பிறகு...
இப்பொழுதுதான்...
நான் என்
பால்யத்தின் மொழியைத்
தேடத் துவங்கி இருந்தேன்.
விளையாட்டின் வார்த்தைகளால்
நிரம்பி இருந்த அதில்...
அம்மாவின் அன்பைப் போல்
ஒரு பேரன்பும்...
அம்மாவின் அழகைப் போல்
ஒரு பேரழகும் ....
நிரம்பி இருந்தது.
சாதிகளும்...மதங்களும்... பேதங்களும்...
கலக்காத அப் பெரும் மொழி....
கிழிந்த ஆடைகளையும்...
கீழ்ச் சேரிகளையும்...
வித்தியாசப் படுத்தாமல் இருந்தது.
வீடுகளுக்கு வெளியே இருந்த
என் உலகத்தில் திரிந்த அந்த மொழி...
சிறு...சிறு... சண்டைகளோடு திரிந்தாலும்...
காயங்களற்றும்....
காயப்படுத்தாமலும் இருந்தது.
யாரும் அறியாத
ஒரு பெரும் கடவுள்...
என் அம்மாவின் கர்ப்பம் திறந்து
நான் வருகையில்...
மெல்லிய பூ கொண்டு
என் நாவில் எழுதிய மொழி...
பூமியின் சுழற்சிகளில்...
நான் செதுக்கப் பட்டுவிட...
விழுந்து வேறாகி...
காணாமல் போய்விட்டது...
வெகு நாட்களுக்குமுன்பே...
நானும்...இன்னும் யாரும்...
அறியாமலேயே.