பின்னிரவு நினைவுகள்
பெருங் காட்டை
விரட்டும்
பட்டாம் பூச்சி
கூட்டத்தில்
மழலையாகிறது புலி....
மௌனம் தேடும்
ஆழ்மனம்
கொண்ட யுத்தங்களில்
ரத்தமாகிறது
பனித்துளி....
நீர் வீழ்ச்சியின்
தத்துவத்தில்
குதூகளிக்கிறது
மரணம்....
கவிஞன் தேடும்
உலகம்
அறைக்குள்ளும்
தரிக்கிறது ஜனனம்....
நிழல் வரைந்த
ஓவியனின் தூரிகையில்
கருப்பு வியர்வை....
மூட்டைக்குள்
முடங்கிய பிணத்துக்கும்
மனைவி முத்தம் வைக்கிறாள்....
ஏக்கத்தின் நகம்
கடிக்கும் காலங்கள்
தூங்கி போகிறது....
காற்றோடு கரையும்
ஒரு பாட்டுக்குள்
மனம் தேங்கி விடுகிறது....
விடியலுக்கான நேரம்
நீண்டு போகட்டும்....