நட்பு என்பது யாதெனில்...

நட்பு என்பது யாதெனில்...
தெளிவுடன் இதனை எழுதிட துடித்தேன்..
நித்தமும் நட்பின் நிழலில் நிலைத்திட்ட பிறகு
அதன் ஆழம் அறியவே முற்படும் மனது..
எதனுடன் ஒப்புமை செய்குவேன் நட்பை..??
பல நேர சிந்தனைகளுக்கிடையில்..
ஐம்பூதங்களின் வல்லமை மனதில் வலமுற்றது...
ஆகாயமென விரிந்தது நட்பெனக் கண்டேன்..
பகலொன்றும் இரவொன்றும் வேடம் பூண்டதால் மறுத்தேன்;
மழைபோல் குளுமை தருவது நட்பென நினைத்தேன்..
வெள்ளம் வந்தால் அழிவுண்டு மறுத்தேன்;
வாழ்வில் ஒளிதரும் தீபமென நினைத்தேன்..
தீபத்தீ பிடித்தால் எரிக்குமே -வெறுத்தேன்;
நிலம்போல் வாழ்நாளெல்லாம் தாங்குமா பார்த்தேன்..
நிலச்சரிவை அறிந்ததும் அதனையும் மறுத்தேன்;
இதம் தரும் தென்றல்தான் நட்பென நினைத்தேன்..
புயலொன்றைக் கண்டதும் சச்சரவின்றி மறுத்தேன்;
ஐம்பூதங்களை மிஞ்சிதான் நட்பெனக்கண்டேன்!!
வேறெதுவெனச் சொல்லுவேன் நட்பினை..??
கடவுளெனச் சொல்வதா?? மாட்டேன்; ஆங்கே நாத்திகர்கள் உண்டு !!
எல்லோரும் நம்பும் இயற்கையெனச் சொல்வதா?? இல்லை; அதற்கு அழிக்கும் குணமும் உண்டு !!
தூய உள்ளம்தான் அதனை தாயெனச் சொல்வதா?? ஐயகோ -இன்னமும் இங்கே அனாதைகள் உண்டு !!
ஒப்பில்லாவற்றுடன் ஒப்பிட்டும் சரிசமம் கிடைக்கவில்லை!
எண்ணங்களில் சிறைப்படவில்லை !!
வார்த்தைகளில் விழுந்திடவில்லை ..!!!
சற்றே கண்களை மூடினேன்; உணரத்தான் முடிகிறது..
எழுதுகிறேன் இப்படியாக
நட்பு என்பது யாதெனில் -
யாதொரு ஒப்புமை இல்லா உயிர் உணர்வு..