எங்கே தேடலாம்!

பொருளைத் தொலைத்தால்
பூமியில் தேடலாம்!
அருளைத் தொலைத்தால்
ஆன்மாவில் தேடலாம்!
இருளைத் தொலைத்தால்
பகலில் தேடலாம்!
பெருமை தொலைந்தால்
எங்கே தேடலாம்?
உறவைத் தொலைத்தால்
ஊரினில் தேடலாம்!
மரபைத் தொலைத்தால்
இலக்கியம் தேடலாம்!
திருவைத் தொலைத்தால்
வரவினில் தேடலாம்!
அருமை தொலைந்தால்
எங்கே தேடலாம்?
அன்பினைத் தொலைத்தால்
பண்பினில் தேடலாம்!
இன்பம் தொலைத்தால்
இயற்கையில் தேடலாம!
சீரினைத் தொலைத்தால்
சிறப்பினில் தேடலாம்!
பேரே தொலைந்தால்
எங்கே தேடலாம்?
மனிதம் தொலைத்தால்
மனதினில் தேடலாம்!
புனிதம் தொலைத்தால்
புண்ணியம் தேடலாம்!
இனிதம் தொலைத்தால்
கசப்பினில் தேடலாம்!
மனிதன் தொலைந்தால்
எங்கே தேடலாம்?
கொ.பெ.பி.அய்யா.