இறைவா !! என் குலம் படைத்தது ஏன்?????
பறந்து பழகும் நேரம்
சிறகொடிக்கப்பட்டு
சிதிலமடைந்த
சிட்டுக்குருவிகளாய்
சிறு காகிதம்
பொருக்கி
இரயில் வண்டி நிலைய
இரட்டைத் தண்டவாளங்களில்
இழியும் நிலை.....
திறந்து வெளியேறி
திசைகள் பல
ஆள வேண்டிய
தருணமதில்
தனை மறந்து
போதையின் பாதையில்
பேதையாய்
மனம் கொண்டு
அலையும் நிலை .....
வாகன நெரிசல் மிகு
வண்ண நிறுத்தி முதல்
வசூல் அள்ளும்
ஏழுமலை தெய்வம்
வாழும் வேங்கடம்
வாசல் வரை
பலர் முகம்
பார்த்து
சிரம் நீட்டும்
நிலை ....
வளமிகு ஆடைகள்
வண்ணப் பைகள் கொண்டு
திண்ணைப் பள்ளி
செல்ல வேண்டிய
தினங்களில்
கோணிப்பைகள் கொண்டு
நாயாக
நான் பிறந்த
குப்பத் தொட்டிகள் தேடும்
நிலை.....
பல காரம்
சுவைத்து
சுவை பானம்
குடித்து
இளைப்பாறும்
மானிட
சந்தையில்
பல நாள்
நீர்மட்டுமுண்டு
பசி வலி கண்டு
விந்தைப்
பிறப்பாய்
வாழும்
நிலை .....
அன்னை உடல் கட்டி
தந்தை கரம் பற்றி
உலவும்
என் பருவ
சிறகுள்ள
சிட்டுக்குருவிகள் பார்த்து
எழும் எண்ணம் நாளும்
விழும் மனம்
பார்த்து எள்ளும்
நிலை ....
மண் குடமென உடைய
பொன் குடமென
மின்னும் இந்த
மனித வனத்தில்
இறைவா !!
என் குலம்
படைத்தது ஏன்?????