அம்மா
அம்மா ..
உன்னை நினைக்கும் போதே
கண்கள் நிறைகிறது!
உன்னுள்
எத்தனை வலி
எத்தனை சுமை
எத்தனை தியாகம்
இப்படி எத்தனை எத்தனையோ ...
ஆம்
உன்னிடம் பகிர்ந்து கொள்ளா
சில மனத் தடங்களே கவிதையாக....
நான் உன் கருவில்
உண்டான பொழுதிலிருந்து
இந்நொடி வரை
என்னைத் தாங்கி வருபவள்
என் நினைவு தெரிய
உன் முகம் தான் என் உலகம்!
காது வரைக்கும் கை எட்டாத
நான்கு வயதில் ஒன்றாம் வகுப்பில்
உட்கார வைத்தாய்...
தொட்டிச் செடியாய் இருந்த
என்னை மலர்வனமாக்கினாய்
ஒவ்வொரு வகுப்பை கடந்து வந்த
போதும் நான் வளர்வதையே மறந்தேன்!
என் முதல் தீட்டுப் பட்ட ஆடையை
தொட்டுப் பார்த்து
எனது பெண்மையை அடையாளம்
காட்டினாய் ...
அப்பாவின் அதட்டலிலும்
தாத்தா பாட்டியின் தேவையிலும்
அண்ணனின் சலிப்பிலும்
எனது முகச்சுளிப்பிலும்
ஒட்டுமொத்த இயந்திரமாய் நீ!
ஒவ்வொரு நாளும்
உன்னால் தீர்மானிக்கப்படும்
எங்களது உலகம்..
நீ ஒரு நாள் இல்லாத பொழுதை
நினைத்துப்பார்க்க முடியவில்லை
நான் வளர வளர நீ முதுமை
அடைந்து கொண்டே செல்கிறாய்
அம்மா...
நீ எனக்காக இன்னும் எத்தனையோ
செய்யக் காத்து கிடக்கிறாய்
நாளும் அன்பால் நிறைகிறாய்....
உன் காதலை விட
இப்பிரபஞ்சத்தில் தொடர்ச்சியான
ஒரு காதலை
நான் காணப்போவதில்லை
என் வாழ்நாள்
காதலி நீ மட்டுமே!
அம்மா.......